சுகாதார வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் மோசமான விளைவுகளை நாடு எதிர்கொள்ள நேரும்

SPC தலைவர் மக்களுக்கு அறிவுறுத்து

கொரோனா வைரஸ் பரவல் தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுகாதார வழிமுறைகளைத் தொடர்ந்தும் முறையாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ள அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் விசேட மருத்துவ நிபுணருமான பிரசன்ன குணசேன, அவ்வாறு மக்கள் அதனை பின்பற்றாவிட்டால் மிக மோசமான விளைவுகளை மீண்டும் எதிர்கொள்ள நேரும் என்றும் தெரிவித்துள்ளார்.

முகத் கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் சமூக இடைவெளியைப் பேணுதல் மற்றும் பொது போக்குவரத்துகளை முடிந்தளவு தவிர்த்தல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை நாட்டு மக்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ள அவர், பாடசாலைகளை திறப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே பாடசாலைகளை திறக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அனேக வர்த்தக நிறுவனங்களுக்கு முன்பாக செய்யப்பட்டிருந்த கை கழுவுவதற்கான தண்ணீர் வசதிகள் தற்போது இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு அதற்கான ஏற்பாடுகள் காணப்பட்டாலும் அங்கு தண்ணீர் தடைபட்டுள்ளதையும் காண முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பல்வேறு கட்டுக் கதைகளை நம்பி சிலர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாமல் உள்ளமை தெரியவருகிறது. பாலியல் ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரும் என சில கட்டுக்கதைகள் பரப்பப்பட்டு வரும் நிலையில் சில தடுப்பூசிகள் மட்டுமே சிறந்தவை என்றும் சில தரப்பினரால் தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறான கட்டுக் கதைகளை நம்பி ஏமாறாமல் அருகிலுள்ள தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறும் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் மரணங்களையும் அதிக பாதிப்புகளையும் தடுப்பூசியால் மட்டுமே தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Thu, 09/30/2021 - 08:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை