பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அதற்கான திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், அதற்கிணங்க 100 மாணவர்களுக்கு குறைவாக உள்ள கிராமிய பாடசாலைகளை முதலில் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு அடுத்த வாரம் முதல் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான உரிய நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன:

நூறு மாணவர்களுக்கு குறைவாக கல்வி கற்கும் கிராமிய பாடசாலைகளை முதலில் திறப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. பொது போக்குவரத்து சேவைகள் உபயோகப்படுத்தப்படாமலே இவற்றில் பெரும்பாலான பாடசாலைகள் இயங்குகின்றன.

அதேவேளை, தொழில்நுட்பத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அசௌகரியங்களை எதிர் நோக்கும் பிரதேசங்களிலேயே மேற்படி மாணவர்கள் வசிக்கின்றனர்.

அவ்வாறான பாடசாலைகளுக்கே நாம் முக்கியத்துவம் வழங்கியுள்ளோம். மேலும் 40 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் அடுத்த மாதத்தில் நாட்டுக்கு கிடைக்க உள்ளன. அதன்போது பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

 

Tue, 09/14/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை