அவுஸ்திரேலியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: பிரிட்டன், அமெரிக்காவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

அவுஸ்திரேலியோவுடன் செய்துகொண்ட புதிய பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

சீனாவை எதிர்கொள்ளும் முயற்சியாகப் பார்க்கப்படும் இந்த உடன்படிக்கை மூலம் அமெரிக்கா மற்றும் பிரிட்டன், அவுஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கும் தொழில்நுட்பத்தை வழங்கவுள்ளது. ஆனால் இது பிரான்ஸின் கோபத்தை தூண்டியுள்ளது. இதனை ‘முதுகில் குத்தும் செயல்’ என்று அந்த நாடு குறிப்பிட்டுள்ளது. மறுபுறம் இந்த மூன்று நாடுகளும் ‘பனிப்போர் மனோநிலையில்’ இருப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

இந்த உடன்படிக்கை சீனாவை போர் ஒன்றுக்கு தூண்டுவதாக இருப்பதாக அச்சம் வலுத்துள்ளது.

ஆக்கஸ் என்ற இந்த உடன்படிக்கை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் ஆகிய மூன்று தலைவர்களாலும் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் அவர்கள் சீனாவை குறிப்பிட்டு கூறாதபோதும், போட்டி நிலவும் தென் சீன கடலில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் முயற்சியாகவே இந்த உடன்படிக்கை உருவாக்கப்பட்டிருப்பதாக பரவலாக பார்க்கப்படுகிறது.

இந்த உடன்படிக்கை சீனாவுக்கு எதிரான நோக்கம் கொண்டதல்ல என்று ஜோன்சன் பிரிட்டன் எம்.பிக்களிடம் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த உடன்படிக்கையால் பிரிட்டன், சீனாவுடன் போர் ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்படக் கூடும் என்று பிரிட்டனின் முன்னாள் பிரதமர் தெரேசா மே கேள்வி எழுப்பியுள்ளார்.

தாய்வான் மீது சீனா ஆக்கிரமிப்புச் செய்யும் நிகழ்வில் இந்த கூட்டணியின் செயற்பாடுகள் பற்றி பிரதமரிடம் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜோன்சன், ‘பிரிட்டன் சர்வதேச சட்டத்தை பாதுகாக்க உறுதியாக இருப்பதோடு இது உலகெங்கும் இருக்கும் எமது நட்பு நாடுகள் மற்றும் பீஜிங் அரசுக்கு நாம் வழங்கும் கண்டிப்பான அறிவுறுத்தலாகும்’ என்றார்.

தாய்வான் தம்மை இறைமை கொண்ட ஒரு நாடாக கருதுகின்றபோதும், அதனை தமது பிரிந்து சென்ற மாகாணமாக கருதும் சீனா, அதன் மீது அழுத்தங்களை அதிகரித்து வருகிறது. மறுபுறம் இந்த உடன்படிக்கையால் அவுஸ்திரேலியாவுடன் கைச்சாத்திட்ட பல பில்லியன் டொலர் பெறுமதியான நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை இழந்திருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா மீது தனது கோபத்தை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ‘முதுகில் குத்தும் செயல்’ என்று பிரான்ஸ் வெளியுறுவு அமைச்சர் ஸீன் யிவேஸ் லே ட்ரியன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஞாபகமூட்டும் வகையிலான, ‘கொடிய, எதேச்சதிகாரம் கொண்ட மற்றும் எதிர்வுகூர முடியாத தீர்மானம்’ என்று அவர் சாடினார். இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவைக் கொண்டாடும் நிகழ்வை அமெரிக்காவில் உள்ள பிரான்ஸ் இராஜதந்திரிகள் இரத்துச் செய்துள்ளனர்.

இரு நாட்டு உறவில் ‘இது மிக பலவீனமான தருணம்’ என்று அமெரிக்காவுக்கான பிரான்ஸின் முன்னாள் தூதுவர் கெரார்ட் அரவுட் கூறினார். ‘இந்த ஒப்பந்தம் மற்றும் இந்த மூலோபாய ஒப்பந்தம் பிரான்ஸ் தேசிய நலனுக்கு அவசியம் என்பதை அமெரிக்கா தெரிந்திருந்தபோதும் அமெரிக்கா அதனை பொருட்படுத்தவில்லை’ என்று பி.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

பிரான்ஸை தமது முக்கிய கூட்டாளி என்று அழைத்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டோனி பிளிங்கன், பிரான்ஸுடன் அமெரிக்கா தொடர்ந்தும் நெருக்கமாக செயற்படுகிறது என்றார்.

உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, குவாண்டம் தொழில்நுட்பம், க்ரூஸ் ரக ஏவுகணைகளை வழங்குவது என பல்வேறு அம்சங்கள் இந்த உடன்பாட்டில் கூறப்பட்டிருக்கின்றன.

ஆனால் அவற்றுக்கெல்லாம் மேலாக நீர்மூழ்க்கிக் கப்பல்கள்தான் முக்கியமானவை. அவை தெற்கு அவுஸ்திரேலியாவில் அடிலெய்டில் கட்டப்பட உள்ளன. அவற்றைக் கட்டுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனையை அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்க இருக்கின்றன. இதன்மூலம் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை இயக்கும் உலகின் ஏழாவது நாடாக அவுஸ்திரேலியா மாறவுள்ளது. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் வழக்கமான எரிபொருளில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை விட கண்டுபிடிக்க இயலாதவை. எதிரிகளின் பரப்புக்கு உள்ளேயே ஊடுருவிச் செல்லக்கூடியவை.

இவற்றில் அணு ஆயுதங்கள் இருக்காது. மாறாக இவை அணுசக்தி எரிபொருள் மூலம் இயங்குகின்றன. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் இருபது ஆண்டுகள் வரைகூட இவை தொடர்ந்து செயல்படும். ஆயினும் அவுஸ்திரேலியா அணு ஆயுதங்களைப் பெறப் போவதில்லை என்பதை அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்கஸ் உடன்பாட்டின்படி குறைந்தது 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் அவுஸ்திரேலியாவுக்குக் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. எனினும் அவுஸ்திரேலியாவில் கட்டுமான வசதிகள் குறைவாக இருப்பதால் இந்தத் திட்டம் தாமதமாகவே செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிகிறது.

Sat, 09/18/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை