‘சஹாரா’ ஐ.எஸ் தலைவர் பிரான்ஸ் தாக்குதலில் பலி

இஸ்லாமிய அரசு குழுவின் சஹாரா பிராந்திய தலைவர் பிரான்ஸ் துருப்புகளால் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

சஹாரா பிராந்தியத்திற்கான ஐ.எஸ் குழுவை 2015 ஆம் ஆண்டு அத்னன் அபூ வலீத் அல் சஹ்ராவி நிறுவினார். அந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்ற பல தாக்குதல்களுக்கு இந்தக் குழு மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதில் 2020 ஆம் ஆண்டு பிரான்ஸ் தொண்டு ஊழியர்கள் கொல்லப்பட்ட தாக்குதலும் அடங்கும்.

சஹெலில் இடம்பெறும் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான போராட்டத்தில் சஹ்ராவியின் மரணம் மற்றொரு முக்கிய வெற்றி என்று மக்ரோன் தெரிவித்துள்ளார். சஹெல் பிராந்தியமானது மேற்கில் செனகலில் இருந்து கிழக்கில் சோமாலியா வரை சஹாரா பாலைவனத்தின் தென் பகுதியை உள்ளடக்கிய மூன்று மில்லியன் சதுர கிலோமீற்றர் பகுதியாகும்.

எனினும் சஹ்ராவி கொல்லப்பட்ட இடம் மற்றும் வேறு எந்த விபரம் பற்றியும் மக்ரோன் குறிப்பிடவில்லை.

எனினும் பிரான்ஸின் பர்கேன் படை நடவடிக்கையின்போதே அவர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பிளோரன்ஸ் பார்லியின், ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்த படை நடவடிக்கை மாலி, நைகர், சாட் மற்றும் புர்கினா பாசோவை உள்ளடக்கிய சஹேல் பிராந்தியத்தில் ஐ.எஸ் குழுவுக்கு எதிராக இடம்பெற்று வருகிறது.

Fri, 09/17/2021 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை