ஊரடங்கு அமுலாக்கம் குறித்து உரிய தருணத்தில் அறிவிப்பு

நிலைமை உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது

 நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்பில் அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும்போது உரிய தருணத்தில் அறிவிக்கப்படும். இம்மாத இறுதியில் கொவிட்-19 தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (14) இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் ஏதேனும் மாற்றங்கள் முன்னெடுக்கப்படுமாயின் அது குறித்த உரிய தருணத்தில் அறிவிக்கப்படும்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளைப் போலவே நாட்டு மக்களின் பொருளாதாரம் குறித்தும் அரசாங்கம் அவதானம் செலுத்துகிறது. எனவே தான் பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைப்பதற்கும் சில வியாபாரங்களை முன்னெடுப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. அதே போன்று வெற்றிகரமான தடுப்பூசி வழங்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே இம்மாத இறுதியில் கொவிட்-19 தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

Wed, 09/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை