ஜனாதிபதியின் அழைப்பிற்கு புலம்பெயர் சமூகம் வரவேற்பு

தீர்வு முயற்சிகளுக்கு நல்லதொரு சமிக்ஞை எனவும் தெரிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணாமல் போனோர் விடயத்திலும் நல்லதொரு தீர்வினை ஜனாதிபதி வழங்குவார் எனவும் நம்பிக்கை தெரிவிப்பு

புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் முகநூல், டுவிட்டரில் பாராட்டி பதிவுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நடத்திய பேச்சுவார்த்தையின்போது தமிழ் மக்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழுகின்ற சமாதானத்தை விரும்பும் தமிழ் சமூகத்தினர் தமது வரவேற்பையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக உள்ளக பொறிமுறை ஊடாக, நீண்ட காலமாக நிலவி வருகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்தினருக்கு ஜனாதிபதி பகிரங்கமாக விடுத்துள்ள அழைப்பை புலம்பெயர்வாழ் தமிழ் சமூகத்தின் 95 சதவீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வரவேற்றுள்ளதாக ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழரான அனஸ்லி ரட்ணசிங்கம் தினகரனுக்குத் தெரிவித்தார். அத்துடன் சிறைகளில் நீண்டகாலமாக அடைபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை துரிதமாக விசாரணை செய்து விரைவாக விடுதலை செய்வதற்கு தான் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்வேன் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடம் ஜனாதிபதி அளித்த உறுதிமொழியை ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் வரவேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காணாமல் போனோர் விடயத்தில் ஆரம்பம் முதலே மிகவும் கரிசனையாகச் செயற்பட்டுவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அது தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திடம் வழங்கிய உறுதிமொழியை தமிழ் அரசியல் தலைவர்கள் உட்பட மக்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

மிக விரைவாக இந்த தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுவிப்பார் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு உள்ளதாக இந்துமத குருவான பிரம்மஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திர குருக்கள் கருத்து தெரிவித்தார். ஜனாதிபதி தெரிவித்துள்ள இந்த விடயங்கள் குறித்து தமிழ் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து சிந்தித்து செயற்பட வேண்டும்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பானது புலம்பெயர்வாழ் சமூகத்திற்கு இலங்கையில் வந்து முதலீடுகளை மேற்கொண்டு தமது சொந்த நாட்டில் இருப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைய இருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் மற்றும் உண்மையான சமாதானத்தை விரும்பும் தமிழ் அரசியல் தலைவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆனந்தசங்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் தொடர்பான வரவேற்புகள் குறித்த பதிவுகளை புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பலரும் தமது முகநூல் மற்றும் டுவிட்டர் ஊடாக பதிவுகளை செய்து வருகின்றனர். அதேபோன்று உள்நாட்டிலும் பல ஆன்மீக மற்றும் தமிழ் அமைப்புகள் ஜனாதிபதியின் உறுதி மொழிகள் குறித்து தமது வாழ்த்துக்களை ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்து வருகின்றன. டென்மார்க் நகரில் வாழும் கரவை ஊரான் தர்மகுலசிங்கம் இது குறித்து தெரிவிக்கையில் ஜனாதிபதியின் அறிவிப்பை ஒரு நல்லதொரு வாய்ப்பாக தமிழ்மக்கள் கருத வேண்டும். இதனை சரிவர புரிந்துகொண்டு செய்து முடிப்பது தமிழ் மக்களது தலைமைகளின் கைகளிலே உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

நமது விஷேட நிருபர்

Wed, 09/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை