நாட்டில் மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் கிடையாது

தேசிய மருந்து அதிகார சபைத் தலைவர் உறுதியளிப்பு

 

நாட்டில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு அல்லது தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்வதாக எண்ணி மக்கள் வீணான சந்தேகம் கொள்ளவேண்டிய  அவசியம் கிடையாது என தேசிய மருந்து பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் ரசிக விஜேவன்ன தெரிவித்துள்ளார்.

தரவுத் தொகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் மூலம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையானது மருந்து, மருத்துவ உபகரணங்கள் ஏனைய உற்பத்திகள், மருந்தகங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் போக்குவரத்து விநியோகம் உள்ளிட்ட பதிவுகளை மேற்கொள்ளுதல், அனுமதிப் பத்திரங்கள் விநியோகித்தல் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் ஒழுங்குபடுத்தும் நிறுவனமாகும்.

அதற்கிணங்க அனைத்து விலை கோரலும் அரசாங்கத்தின் கொள்கை ஏற்பாடுகளுக்கு அமைய இடம்பெறுவதுடன் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள சிறந்த அனுபவமுள்ள 7 உறுப்பினர்களைக் கொண்ட தொழில்நுட்ப மேற்பார்வை குழு மூலம் முறையாக அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதனூடாகவே உரிய சேவை வழங்கும் நிறுவனங்களும் தெரிவு செய்யப்படுகின்றன என்பதுடன் தொழில்நுட்ப மேற்பார்வை குழுவுக்கு இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அங்கத்துவ நிறுவனத்தில் தகவல் தொடர்பாடல் துறை சார்ந்த 2 பிரதிநிதிகளும் உள்ளடங்குகின்றனர்.

மேற்படி தரவு தொகுதி தயாரிப்புக்காக உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிறுவனமாக" Epic Lanka technologies ( Pvt) Ltd" நிறுவனம் மட்டும் அந்த நடவடிக்கைக்கான திட்ட முகாமையாளரான ஸ்ரீலங்கா தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அங்கத்துவ நிறுவனத்துடன் (ICTA) நிறுவனத்துடன் கடந்த 2012 மே 3ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை கிணங்க குறித்த உடன்படிக்கையின் நடைமுறை காலம் 5 வருடங்கள் ஆகும் என்பதுடன் அந்த உடன்படிக்கை இணங்க சம்பந்தப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு எம்மால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் மருந்து தட்டுப்பாடு தொடர்பாகவோ அல்லது தரமற்ற மருந்துப் பொருட்களை நாட்டிற்கு கொள்வனவு செய்துள்ளதாக எண்ணியோ மக்கள் வீணான அச்சம் கொள்ள தேவையில்லை.

அத்துடன் அத்தியாவசிய மருந்துகள் கொள்வனவு மற்றும் பகிர்ந்தளித்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கான அனுமதி காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதனைத் தவிர நாட்டின் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக அனுமதிப் பத்திரங்கள் விநியோகிப்பது தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் தற்போது நடைபெற்று வருவதையும் குறிப்பிட விரும்புகின்றோம். தரவு தொகுதியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு தொடர்பில் தற்போது குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் மூலம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அது தொடர்பில் மேலதிக தகவல்கள் எதிர்காலத்தில் வெளிப்படுத்தப்படும் என்றும் மேற்படி அதிகார சபையின் தலைவர் ரசிக விஜேவன்ன தெரிவித்துள்ளார்.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 09/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை