காணாமல் போனவர்கள் விவகாரம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும்

ஜனாதிபதி உறுதியாக உள்ளதாக நீதியமைச்சர் தெரிவிப்பு

காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம் நேற்று முன்தினம் அனுஷ்டிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். கடந்த அரசாங்கத்தை போலல்லாது காணாமல் போனோர் அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் தொடர்பாக கண்காணித்து, இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காணாமற்போனவர்கள் எந்த காரணத்திற்காக காணாமல்போனார்கள் என்பதை பற்றி விசாரிக்கத் தேவையில்லையென ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்கள் அனைவரும் இலங்கை பிரஜை என்பதை மனதில் வைத்து, இவ்வாறான சம்பவம் மீண்டும் நிகழாமலிருப்பதை உறுத்திப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டினார்.

யுத்தம் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்தபோதிலும் இன்னும் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் இருப்பது, நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமென அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஒருவர் எத்தகைய சூழலில் காணாமல் போனார் எனபதை பார்க்காது, காணாமற்போனோரை அடையாளம் கண்டு இழப்பீட்டை வழங்குவோமென அமைச்சர் அலி சப்ரி உறுதியளித்துள்ளார்.

Wed, 09/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை