நாட்டின் உரத் தேவையை பூர்த்தி செய்ய 96,000 மெற்றிக்தொன் பசளையை கொள்வனவு செய்ய அரசு நடவடிக்கை

ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க

பெரும் போகத்துக்கு தேவையான உரத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 96,000 மெற்றிக் தொன் 10 வீத நைதரசன் அடங்கிய சீ வீட் பசளையைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அது தொடர்பில் தெரிவித்த அவர், மேலும் 3,000 மெற்றிக் தொன் 15வீத நைதரசன் அடங்கிய புரோட்டின் பெப்டயிட்டை இறக்குமதி செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சேதனப் பசளையைப் பயன்படுத்தி ஏழு இலட்சம் ஹெக்டயார் நிலப்பரப்பில் நெல் உற்பத்தியை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சேதனப் பசளை உற்பத்தி மற்றும் சேதனப் பசளை உபயோகம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் நஞ்சற்ற உணவை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் ஜனாதிபதியின் காத்திரமான கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் நேற்றைய இந்த செய்தியாளர் மாநாடு அமைந்ததுடன் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

தேசிய உரச் செயலகத்தினூடாக அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொண்டுள்ள சேதனப் பசளை உற்பத்தியாளர்கள் 39 பேரிடம் இருந்து பசளையைக் கொள்வனவு செய்வதற்கான கேள்வி மனுக்கள் கோரப்பட்டுள்ளன.

அதேவேளை சேதனப் பசளை உபயோகத்தினால் விளைச்சல் குறைவடைந்து வருமானம் குறைவடையுமாயின் கட்டுப்பாட்டு விலைக்கும் அதிகரித்த விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கும் அரசாங்கம் தயாராக உள்ளது. விவசாயிகள் அது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதை ஜனாதிபதி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் இரசாயன பசளைபயன்பாட்டில் மக்களின் வாழ்க்கைக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதில் பின்வாங்கப் போவதில்லை என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும் எனவும் குறிப்பிட்டார்.அந்த வகையில் அவரது தீர்மானம் அவசரமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல. அதற்கிணங்க நஞ்சற்ற உணவில் முதன்மையான நாடாக எமது நாட்டை உருவாக்குவது அனைத்து பிரஜை களினதும் கடமையாகும். அதற்காக நேர்மறையான எண்ணங்கள் ஊடாக அரசாங்கத்துடன் கைகோர்த்துக் கொள்ளுமாறு அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 09/03/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை