83.000 மெ.தொன் சீனியும் மக்களுக்கு சகாய விலையில்!

சதொச, கூட்டுறவுக் கடைகள் மற்றும் தனியார் சுப்பர் மார்க்கெட் ஊடாக கிடைக்க ஏற்பாடு

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நிவுன்ஹெல்ல தெரிவிப்பு

மேல் மாகாணத்தில் களஞ்சிய சாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 83.000 மெட்ரிக் தொன் சீனி, அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.டி.எஸ்.பி. நிவுன் ஹெல்ல தெரிவித்தார். அதேவேளை 30 ஆயிரம் தொன் சீனி ச.தொ.ச. மற்றும் கூட்டுறவு நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் நிலையில் மேலதிகமாக உள்ள சீனியை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக தனியார் துறை சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, நாடளாவிய ரீதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனி, அரிசி மற்றும் நெல் ஆகியவற்றை கண்டுபிடிக்கும் வகையில் தொடர்ச்சியாக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ள இத்தகைய சூழ்நிலையில் உணவுப் பொருட்களை பதுக்கி வைப்பது பாரிய குற்றமாகும் என தெரிவித்துள்ள அவர், உணவுப் பொருட்களை இவ்வாறு பதுக்கி வைப்போருக்கு தாம் ஒருபோதும் மன்னிப்பு வழங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுவரை வத்தளை, களனி, சீதுவை ஆகிய பிரதேசங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சீனி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அக் களஞ்சிய சாலைகளுக்கு நுகர்வோர் அதிகார சபையினால் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர்,

அக் களஞ்சியசாலை உரிமையாளர்கள் தமது தவறை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் சீனிக்கு உரித்தான வர்த்தகர்களுக்கு பின்னர் அதற்கான செலவுகள் மதிப்பிடப்பட்டு நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை அரிசி, நெல், சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கி வைப்பது மற்றும் அதிகரித்த விலைக்கு விற்பனை செய்வது ஆகியவற்றை தடை செய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய கட்டளைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 09/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை