நாட்டில் நேற்றுவரை 76 சதவீதத்தை விடவும் அதிகமானோருக்கு தடுப்பூசி

வெகுவிரைவில் பூரணத்துவம் அடைந்துவிடலாம்

 

புள்ளிவிபரங்களை வெளியிட்டு இராணுவத் தளபதி தெரிவிப்பு

 

நாட்டில் நேற்றுவரை 76 வீதத்தை விட அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கிணங்க இதுவரை 88,01,182 பேருக்கு தடுப்பூசியின் இரு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில் 11.5 மில்லியன் பேர் இந்த வயது தொகுதிக்குள்ளடங்குகின்றனர் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதிக்குள் 4 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகளும் அடுத்த வாரத்தில் மேலும் 4 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகளும் நாட்டிற்கு கிடைக்கவுள்ள நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக இந்த மாதம் 21 ஆம் திகதிக்குள் நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் சுமார் 3.5 மில்லியன் பேர் உள்ளனர். அவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு சுமார் 8 மில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படும். எதிர்காலத்தில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதேவேளை மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைக்கமைய பொருத்தமான தடுப்பூசியை 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் நடைபெற்ற கொரோனா ஒழிப்பு தொடர்பான விசேட செயலணி கூட்டத்தின் போது 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதா அல்லது அவர்களுக்கு பூஸ்டர் ஒன்றினைப் பெற்றுக் கொடுப்பதா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அவற்றைப் பெற்றுக் கொடுப்பதா அல்லது இருபது வயதுக்கும் முப்பது வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதா? எது மிகவும் பொருத்தமானது என்பது தொடர்பில் தமக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி மருத்துவ நிபுணர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார் என்றும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாளாந்தம் புதிதாக இனங் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 4000 பேராக் காணப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக அந்த எண்ணிக்கை குறைவடைந்து வருகின்ற நிலையில் தினசரி மரணமடைவோரின் எண்ணிக்கை 200 ஆக காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 09/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை