சதொசவுக்கு சேரவேண்டிய 54,860 கிலோ வெள்ளைப்பூடு: திருட்டு வழியில் சென்றது எவ்வாறு?

கண்டறிவதற்கான விசாரணை ஆரம்பம்

ச.தொ.ச மூலம் விற்பனை செய்வதற்கு வைத்திருந்த வெள்ளைப்பூடு 54,860 கிலோ கிராம் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் திருட்டுத்தனமாக வேறு தரப்பினருக்கு எவ்வாறு சென்றடைந்தது என்பதை கண்டறிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் விரைவாக கண்டறிந்து பொறுப்புடைய அதிகாரிகளை வேலை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் விசாரணைக் குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அது சம்பந்தமாக பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யுமாறும் அமைச்சர் சதொச தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேற்படி 54,860 கிலோ கிராம் வெள்ளைப்பூண்டை கிலோ 135 ரூபாவுக்கு சதோச விற்பனை நிலையத்திற்கு வழங்கும் புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் அதனை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அதன் விற்பனை பெறுமதி 7,406,100 ஆகும் என்பதுடன் சந்தை பெறுமதி 70 மில்லியன் ரூபாவாகும் அந்த வகையில் மேற்படி செயற்பாடுகளினால் சதொச நிறுவனத்திற்கு 6 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டிற்கு இறக்குமதி செய்து அதன் பின்னர் இறக்குமதியாளர்களால் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாத அத்தியாவசிய பொருட்களை சதொச விற்பனை வலையமைப்பு மூலம் பெற்று நுகர்வோருக்கு மலிவு விலையில் பெற்றுக் கொடுப்பதற்கு வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Mon, 09/13/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை