விவசாயிகளுக்கு 5 ரூபாவை அதிகரித்து நெல் ஆலை உரிமையாளர்கள் 50 பில்லியனை சம்பாதிக்கின்றனர்

விவசாய சங்கங்கள் அவர்களுக்கு துணை போகக்கூடாது

பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் ஒரு கிலோ நெல்லுக்கு விவசாயிகளுக்கு ஐந்து ரூபாவை அதிகமாக வழங்கி விட்டு ஒரு கிலோ அரிசியை 50 ரூபா இலாபத்தில் பெற்று விற்பனை செய்து ஒரு போகத்தில் மாத்திரம் 50 பில்லியனுக்கு மேல் இலாபம் பெறுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத் கமகே தெரிவித்துள்ளார்.

அரசு வங்கிகளில் இருந்து 15 பில்லியனை கடன் பெற்று விவசாயிகளுக்கு ஐந்து ரூபாய் அதிகமாக கொடுத்து விட்டு கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டும் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் என நெல் ஆலைகள் சுற்றிவளைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்புகளை தெரிவிக்கின்ற விவசாய அமைப்புகளிடம் கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே:

பாரிய நெல் ஆலை உரிமையாளர்களிடம் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்வதாக தெரிவித்து விவசாய சங்கங்கள் மற்றும் தேரர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதை காணமுடிகின்றது. தற்போது நெல் ஆலை உரிமையாளர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோர் விவசாயிகளுக்காக எப்போதாவது நீதியைப் பெற்றுக்கொடுக்க முற்பட்டார்களா? என நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.

அவர்கள் விவசாயிகளிடம் ஒரு கிலோ நெல்லை 55 அல்லது 60 ரூபாவுக்கு கொள்வனவு செய்து நாட்டரிசி ஒரு கிலோவை 125 ரூபாவுக்கும் சம்பா ஒரு கிலோவை 150 ரூபாவுக்கும் கீரி சம்பா ஒரு கிலோவை 225 ரூபாவுக்கும் விற்பனை செய்கின்றார்கள்.நுகர்வோர் அந்த விலைக்கு அரிசியை பெற்றுக் கொள்வார்களானால் குறைந்தது ஒரு கிலோ நெல்லை 125 ரூபாவுக்காவது அவர்கள் விவசாயிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளவேண்டும்.

நெல் ஆலை உரிமையாளர்களின் இத்தகைய செயற்பாடுகளினால் நுகர்வோருக்கு பெரும் அநீதி ஏற்படுகின்றது.

விவசாயிகள் தமது நெல்லுக்கு சாதாரண விலையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் எமக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது. விவசாயிகளுக்கு சாதாரண விலை கிடைக்க வேண்டும். அந்த நிலையில் விவசாயிகளை காட்டி நெல் ஆலை உரிமையாளர்கள் பலம் பெறுவதும நியாயமானதல்ல. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Mon, 09/13/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை