இடா புயலினால் அமெரிக்காவில் திடீர் வெள்ளம்: 44 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்களில் இடா புயலால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் புயல் ஆபத்துக் காரணமான வீட்டின் அடித்தளத்தில் பாதுகாப்பாக இருந்தவர்களும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளனர்.

நியூயோர்க் நகரில் அவசர நிலை அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் வரலாறு காணாத மழை வீழ்ச்சியால் திடீர் வெள்ளம் ஏற்பட்டு சுரங்கப்பாதைகளுக்குள்ளும் ஆற்று நீர் புகுந்துள்ளது.

விமானநிலைய ஓடுபதைகளில் வெள்ளநீர் நிரம்பிய சூழலில் பல விமானநிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானப்பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

நியூயோர்க் மற்றும் நியூஜேர்சி மாநிலங்களில் அவசர நிலையை அறிவித்த ஜனாதிபதி ஜோ பைடன், மீட்பு நடவடிக்கைகள் மற்றும் அவசர உதவிகள் வழங்குவதில் ஒருங்கிணைந்து செயற்படும்படி மத்திய அனர்த்த முகாமைத்துவ நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இடா புயல் ஆரம்பத்தில் தாக்கி சேதங்களை ஏற்படுத்திய தெற்கு மாநிலமான லூசியானாவுக்கு பயணம் மேற்கொண்ட பைடன் அங்கு நிலைமைகளை பார்வையிட்டார்.

நியூஜெர்சி மாநிலத்தில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களின் வாகனத்திற்குள் சிக்கியே உயிரிழந்திருப்பதாக ஆளுநர் பிலிப் மர்பி தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் நகரில் பதின்மூன்று பேர் உயிரிழந்திருப்பதோடு இவர்களில் 11 பேர் தமது வீட்டின் அடித்தளத்தில் வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

கடந்த வார இறுதியில் லூசியானாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இடா புயல் தொடர்ந்து நாட்டின் வடக்கு பகுதியை சூறையாடியுள்ளது. இந்த புயலால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Sat, 09/04/2021 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை