ஆப்கானிஸ்தானுக்கு சீனா 200 மில்லியன் யுவான் உதவி

உணவு விநியோகங்கள் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் உட்பட ஆப்கானிஸ்தானுக்கு 200 மில்லியன் யுவான் பெறுமதியான உதவியை வழங்க சீனா உறுதி அளித்துள்ளது.

தலிபான் அரசுடன் தொடர்புகளை பேண தயாராக இருப்பதாக சீனா குறிப்பிட்டிருக்கும் நிலையிலேயே இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன.

ஆப்கானில் புதிய இடைக்கால அரசு நிறுவப்பட்டிருப்பது அந்நாட்டின் சட்ட ஒழுங்கை ஏற்படுத்துவதன் முக்கிய நடவடிக்கை என்று சீனா குறிப்பிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடைக்கால அரசை அறிவித்த தலிபான்கள், ஆப்கானை ‘இஸ்லாமிய எமிரேட்’ என்று பிரகடனம் செய்தனர்.

இந்நிலையில் ஆப்கானின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பகிஸ்தான் மற்றும் துர்க்மனிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுடன் கடந்த புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்திய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஆப்கானுக்கான உதவி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானுக்கு உதவ ஒத்துழைக்கும்படி அண்டை நாடுகளிடம் கேட்டுக்கொண்ட அவர், அந்த நாட்டுக்கு 3 மில்லியன் தடுப்பு மருந்துகளை சீனா வழங்கும் என்றும் தெரிவித்தார்.

Fri, 09/10/2021 - 14:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை