அதிவேக பாதையின் களனிகம காசாளர் 14 இலட்சத்துடன் மாயம்

பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

அதிவேக பாதையின் களனிகம இடைமாறல் அலுவலகத்தின் பொறுப்பிலுள்ள இரு பெட்டகங்களிலிருந்த 14 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இப் பணத்துக்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதான காசாளர் ஒருவரும் மாயமாகியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.இது தொடர்பில் பண்டாரகம பொலிஸ் நிலைய குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தனது கடமை நேரத்தை பாரமெடுக்க கடமைக்கு வந்துள்ள காசாளர் ஒருவர், நிலுவையிலுள்ள பணத் தொகையை சரி பார்த்தபோது அதில் 14 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா குறைவாக இருப்பதை கண்டறிந்துள்ளார்.

அவர் அது தொடர்பில் உயரதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். அதிகாரிகளின் அறிவுறுத்தல் பிரகாரம் பிரதான பொறியியலாளர் ஒருவர் இது தொடர்பில் பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.உள்ளக ஆய்வின்போது, காசாளர்களின் பெட்டகத்திலிருந்தும், அன்றாட வருமானத்தை வைக்கும் பெட்டகத்திலிருந்தும் பணம் திருடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணையில், பிரதான காசாளர் ஒருவர் மாயமாகியுள்ளமை தெரிய வந்துள்ளதுடன், அவரைத் தேடி தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சூதாட்டத்துக்கு அடிமையாகியவரென நம்பப்படும் காசாளர், புளத் சிங்ஹல பகுதியைச் சேர்ந்தவரெனவும், அவர் வதியும் வீட்டில் அவர் இல்லையென குறிப்பிட்ட பொலிஸார், அவரது கையடக்கத் தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 09/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை