100 மாணவர்களுக்கு குறைவான 3,000 பாடசாலைகளை திறப்பதற்கு பரிந்துரைகளை பெற பணிப்பு

கல்வித்துறை அதிகாரிகளை கொண்ட தொழில்நுட்பக்குழு நியமனம்

நாடளாவிய ரீதியிலுள்ள 100 மாணவர்களுக்கு குறைவான 3000 பாடசாலைகளை முதலில் திறப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கவனம் செலுத்தியுள்ளார்.  

நேற்றைய தினம் நடைபெற்ற கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் அமர்வில் அது தொடர்பில் கருத்துக்களை தெரிவித்த ஜனாதிபதி, மேற்படி பாடசாலைகளை திறப்பது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் பரிந்துரைகளை பெற்றுத்தரும் வகையில் கல்வித்துறை அதிகாரிகளைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவொன்றையும் நியமித்துள்ளார்.  

அதேவேளை பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சின் உயரதிகாரிகளுடன் விரிவான பேச்சுவார்த்தையையும் ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.   பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் 7 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமது கல்வியை இழந்துள்ள நிலையில் 100 மாணவர்களுக்கு குறைவாக உள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் கிராமிய பகுதிகள் உள்ளிட்ட பிரதேசங்களில் காணப்படுவதாகவும் அவற்றை முதலில் திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.  

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் அமர்வு நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் நடைபெற்றது.  

அரசாங்கம் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடித்துள்ள நிலையில் அதன் பின்னர் நாட்டை திறக்க வேண்டுமானால் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விபரமான அறிக்கையொன்றை பெற்றுத் தருமாறு இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதேவேளை தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் போயா தினம் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேற்படி பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான பசில் ராஜபக்ச கெஹெலிய ரம்புக்வெல்ல,பந்துல குணவர்தன, டளஸ் அழகப்பெரும, பவித்ரா வன்னியாராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன, ரமேஷ் பத்திரன மற்றும் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன் இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, சிசிர ஜயக்கொடி ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்,இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம்  

 
Sat, 09/11/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை