ஆப்கானுக்கு 1 பில். டொலர் நன்கொடை அளிக்க உறுதி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்து வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டிருப்பதால் அங்கு வறுமை மற்றும் பட்டினி அதிகரித்திருக்கும் நிலையில் 1 பில்லியனுக்கு மேல் உதவி வழங்குவதற்கு நன்கொடையாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.

ஆப்கானில் பாரிய மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்படுவது குறித்த அச்சம் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நான்கு தசாப்தங்களுக்கு மேல் நீடிக்கும் போர் மற்றும் ஸ்திரமற்ற நிலையில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில், மனிதாபிமான நெருக்கடி தீவிரம் அடைந்திருப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரித்தார். ஆப்கான் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற உயர்மட்ட அமைச்சரவை கூட்டத்தின்போதே இதனை அவர் தெரிவித்தார்.

ஜெனீவாவில் இடம்பெற்ற இந்த மாநாட்டுக்கு பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், 606 மில்லியன் டொலர் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் எவ்வளவு தொகை வாக்குறுதி அளிக்கப்பட்டது என்ற ஐ.நா இன்னும் தீர்மானிக்கவில்லை என்றார்.

இந்த மாத முடிவில் பல ஆப்கானியர்களுக்கு உணவு தீர்ந்துவிடும் என்று குட்டரஸ் குறிப்பிட்டுள்ளதோடு 14 மில்லியன் மக்கள் பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றுவதற்கு முன்னர் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக 550,000க்கு அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு 3.5 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருவதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆப்கான் மோசமான பஞ்சத்திற்கும் முகம்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 09/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை