ஒரு வாரத்தில் மட்டும் ரூ. 09 பில்.வருமானம்

ஊரடங்கு காலத்திலும் சுங்கத் திணைக்களம் சாதனை

நாட்டில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளபோதும் சுங்கத் திணைக்களத்தின் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் கடந்த ஒரு வாரத்தில் 9.34 பில்லியன் ரூபா இறக்குமதி வருமானமாகப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை 46. 43 பில்லியன் பெறுமதியான ஏற்றுமதிப் பொருட்களுக்கும் சுங்கத் திணைக்களம் கடந்த ஒரு வார காலத்தில் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள சுங்கத் திணைக்கள பேச்சாளர் சுதந்த சில்வா:

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள நிலையிலும் சுங்கத்தின் சேவைகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தில் 46.43 பில்லியன் பெறுமதிமிக்க பொருட்களுக்கான ஏற்றுமதி அனுமதியை சுங்கத் திணைக்களம் வழங்கியுள்ளது. அத்துடன் 9.34 பில்லியன் ரூபாவை இறக்குமதி வரியாகவும்.பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ள போதும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அனைத்து நடவடிக்கைகளும் வழமைபோன்று இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 09/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை