அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவின் கருத்துக்கு மனோ MPயின் பதில் சிறுபிள்ளைத்தனமானது

நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்காக அவர் செய்தது என்ன?

புதிய ஜனநாயக  மக்கள் முன்னணியின்  தலைவர் ரவிக்குமார்  கடும் கண்டனம்

 

நாடு திரும்ப விருப்பம் கொண்டுள்ள புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தொடர்பாக அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ டுவிட்டரில் பதிவிட்ட கருத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் முகநூல் மற்றும் டுவிட்டரில் பதில் பதிவுகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதென்று புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்களாக நல்லாட்சி அரசாங்கத்தில் வெறுமனே அமைச்சர் பதவியை வகித்து வந்த மனோ கணேசன் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் தமிழ்மக்களுக்காக செய்ததே இல்லை. மாறாக தன்னையும் தனது கட்சி சார்ந்த சிலரையும் மட்டுமே கவனித்து வந்துள்ளார். இன்று அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தமிழ் மக்களுக்காக நல்ல விடயங்களை செய்ய முன்வருகையில் அதனை தடுக்கும் வகையில் சிறுபிள்ளைத்தனமாக அறிக்கைகளை விட்டு வருகின்றார். இதனை அவர் உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும் நடராஜா ரவிக்குமார் கேட்டுள்ளார். எந்த நேரமும் முகநூலில் தன்னைத் தானே புகழ்ந்து பாடுவதும், அதனைச் சிலரை வைத்து லைக் போட வைத்து வரவேற்பதுமாகவே அவரது பொழுது போய்க் கொண்டிருக்கிறது. எனவே அவர் அரசாங்கம் செய்யும் நல்ல விடயங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் அல்லது மௌனமாக இருந்து தமிழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் ரவிக்குமார் கேட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் நல்லாட்சி அரசாங்கம் ஒரு சிறு துண்டு காணிகளேயே விடுவித்தது. ஆனால் யுத்தத்தின் பின்னர் ஆரம்ப காலத்திலிருந்து இன்று மீண்டும் ஆட்சியை பொறுப்பேற்ற பின்னர் இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை 90 வீதம் விடுவித்துள்ளது. இதனைப் பொறுக்க முடியாத மனோகணேசன் போன்றவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டு அறிக்கைகளை விட்டு வருகின்றார்கள். இதனை அவர்கள் நிறுத்த வேண்டுமெனவும் ரவிக்குமார் கேட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஏதாவது சிறு விடயத்தையாவது தமிழ்மக்களுக்காக செய்திருந்தால் அறிக்கை விடுவதில் நியாயமிருக்கிறது. ஆனால் அப்போது எதுவுமே செய்யாது விட்டு இப்போது அறிக்கை விடுவது அநாகரிகமான செயலெனவும் ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தான் மட்டுமல்ல வடக்கு கிழக்கு சமூகத்தைச் சேர்ந்த பலர் மனோ கணேசனது செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

 

நமது நிருபர்

Tue, 08/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை