பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க பத்தாண்டு செயல் திட்டம்

சுற்றாடல் அமைச்சரிடம் ஒப்படைப்பு

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கான பத்தாண்டு (2021 முதல் -2030வரை) காலப்பகுதிக்கான தேசிய செயல் திட்டத்தை சுற்றாடல் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, இந்த பத்தாண்டு தேசிய செயல் திட்டத்தை சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை ஒப்படைத்தார்.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்த தேசிய செயல் திட்டத்தை உருவாக்க ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம், IETC- சுற்றுச்சூழலுக்கான தொழில்நுட்பம் மற்றும் ஜப்பான் அரசும் சுகாதார அமைச்சுக்கு ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளன.

இலங்கையில் அண்மைக்காலமாக பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில் உள்ள முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு அடுத்த பத்து வருடங்களுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, 3ஆர் கருத்தைப் பின்பற்றி பிளாஸ்டிக்கைக் குறைத்தல், பயன்படுத்துதல், மீண்டும் பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றின் மூலம் சுற்றுச்சூழலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நம் நாட்டிற்கு ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் அளவு 300,000 மெட்ரிக் தொன் ஆகும். மேலும், நம் நாட்டில் நகர்ப்புற திடக்கழிவுகளின் அளவு நாள் ஒன்றுக்கு 10,768 மெட்ரிக் தொன் ஆகும். மேலும், நாள் ஒன்றுக்கு உள்ளூர் அதிகாரிகளால் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளின் அளவு 3458 மெட்ரிக் தொன் ஆகும். அதன்படி, நம் நாட்டில் தினசரி அகற்றப்படும் திடக்கழிவுகளிலிருந்து சேகரிப்பு இல்லாமல் 50 சதவிகிதம் சுற்றுச்சூழலுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாக உள்ளது. இந்த தீவிர சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வு காண ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டாக்டர் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.

“நமது நாட்டில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க சுற்றுச்சூழல் அமைச்சு ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன்படி, சுற்றுச்சூழலுக்கு அதிகம் சேரும் அழியாத பிளாஸ்டிக் மற்றும் பொலிதீனை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பல பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 31 முதல், ஐந்து பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்கள் உட்பட அதனை சார்ந்துள்ள 5 பொருட்களின் உற்பத்திகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஒகஸ்ட் 1ஆம் திகதி முதல் உணவு சுத்தும் லன்ச் சீட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையும் தடைசெய்யப்பட்டது. பிளாஸ்டிக் பைகள் உட்பட 08 பிற பொருட்களை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பத்தாண்டு தேசிய செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதன் மூலம் நாட்டை ஆக்கிரமித்துள்ள பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் தொற்றுநோய்க்கு ஒரு நிலையான தீர்வை வழங்க முடியும்” என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது சுட்டிக்காட்டினார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 

Sat, 08/28/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை