காபூல் விமானநிலையத்தில் தொடர்ந்து பதற்றம்: நெரிசலில் மேலும் ஏழு பேர் பலி

ஐ.எஸ் தாக்குதல் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் காபூல் விமானநிலையத்திற்கு அருகில் நாட்டை விட்டு வெளியேற பெரும் கூட்டம் திரண்ட நிலையில் அங்கு ஏற்பட்ட பதற்ற சூழலில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்திருப்பதாக பிரிட்டிஷ் இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நால்வர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே மேலும் பலர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வாரத்திற்கு முன் தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதை அடுத்தே நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் காபூல் விமானநிலையத்தில் பலரும் திரண்டு வருகின்றனர். இங்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட சர்வதேச நாடுகள் தமது மக்களை ஆப்கானை விட்டு வெளியேற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

ஆப்கான் விமானநிலையத்திற்கு வெளியே மக்கள் நெரிசலில் சிக்கி மிதிபட்டு காயத்துக்குள்ளான பல சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஐ.எஸ் அமைப்பால் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில், அமெரிக்க மக்கள் காபூல் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என எச்சரித்துள்ளது அமெரிக்கா.

காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால், அங்கு வர வேண்டாம் என அமெரிக்கா சனிக்கிழமையே எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரசு தரப்பிலிருந்து, பயணம் மேற்கொள்ளுமாறு கூறுபவர்கள் மட்டும் காபூல் வந்தால் போதும் எனக் கூறியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஆப்கானின் சூழலை கண்காணித்து வருவதாகவும், மாற்று வழிகளை குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

காபூல் விமானநிலையத்தில் இருந்து இதுவரை சுமார் 2,500 அமெரிக்க பிரஜைகள் உட்பட 17,000 பேர் வரை வெளியேற்றப்பட்டிருப்பதாக கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்தது.

ஆப்கானில் இருந்து வெளியேற வரும் அமெரிக்கர்கள் மற்றும் ஆப்கானியர்கள் தொந்தரவுகளுக்கு முகம்கொடுப்பதாகவும் சிலர் தாக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காபூல் விமானநிலையத்தில் தற்போதைய பதற்ற சூழல் பற்றி ஏனைய நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், தலிபான் படையினர் ஒழுங்குமுறையைக் கொண்டுவந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமான நிலையத்திற்கு வெளியே உள்ள நுழைவாயில்களில் மக்கள் வரிசையாக நிற்கவும் அவர்கள் கூட்டம் கூடாமல் இருக்கவும், தலிபான்கள் ஏற்பாடு செய்துள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

காபூல் விமான நிலையத்தில் குழப்பமான சூழல் நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த தலிபான்கள் நடவடிக்கை எடுக்கத் ஆரம்பித்துள்ளனர்.

நேற்று காலை முதல் விமான நிலையத்தில், வன்முறையோ குழப்பமோ இல்லை என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர். இருப்பினும், நிலைமை எப்போது வேண்டுமானாலும் மோசமாகலாம் என்று கூறிய தலிபான் அதிகாரி ஒருவர், நாட்டைவிட்டு வெளியேற விரும்புவோர் சுமுகமாய் வெளியேறத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

காபூல் விமானநிலையம் தற்போது அமெரிக்க படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் படை அமெரிக்க பிரஜைகள் மற்றும் ஏனைய நாட்டு பிரஜைகள் ஆப்கானில் இருந்து வெளியேற உதவி வருகிறது. இதில் தலிபான்களின் ஆட்சியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் வெளிநாட்டினருக்காக வேலை பார்த்த ஆப்கானியர்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

எனினும் அமெரிக்க துருப்புகள் ஆப்கானில் இருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. அதன் பின்னர் என்ன நிகழும் என்பது உறுதி இல்லாமல் உள்ளது.

இதனிடையே ஆப்கானில் தமது கட்டுப்பாட்டை வலுப்படுத்த தலிபான்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

தலிபான் இணை நிறுவனரான முல்லா அப்துல் கானி பரதர் தற்போது காபூல் நகரில் இருப்பதோடு புதிய அரசு ஒன்றை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஆப்கானில் இருக்கும் மூத்த தலிபான் உறுப்பினராக அவர் இருப்பதோடு தலிபான் தலைமையில் எதிர்காலத்தில் அமையவிருக்கும் அரசில் முக்கிய புள்ளியாக அவர் இருக்க வாய்ப்பு உள்ளது.

அடுத்த சில வாரங்களில் ஆப்கானின் புதிய அரசின் வடிவம் வெளியிடப்படும் என்று தலிபான் அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அது மேற்குலகில் இருப்பது போன்ற ஜனநாயக வடிவத்தில் இருக்காது என்றும் ஆனால் அனைவரினதும் உரிமை பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Mon, 08/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை