இரு டோஸ்களையும் பெற்றவர்களுக்கு மாத்திரமே நடமாடும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி

கொழும்பு மாவட்டச் செயலாளர் தெரிவிப்பு

கொரோனா தடுப்பூசிகளில் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே நடமாடும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாத நபர்கள் நடமாடும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இக்காலங்களில் கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்களுக்கான நலன்புரி திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ளும் வகையில் நாரஹேன்பிட்டி, இரத்மலானை,மீகொட, மற்றும் போகுந்தர ஆகிய நான்கு பொருளாதார மத்திய நிலையங்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் 12,294 நடமாடும் வர்த்தகர்களும் 1489 மொத்த விற்பனை நிலையங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன அத்துடன் 2345 விநியோக வழிமுறைகள் இனங்காணப்பட்டுள்ளன என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Thu, 08/26/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை