ஆலயங்கள் முடக்கப்படாமல் இருப்பது ஆலய நிர்வாக, பக்தர்களின் பொறுப்பு

இந்துமத விவகார இணைப்பாளர் பாபுசர்மா

தற்போது ஆலயங்களில் திருவிழாக்கள் சுகாதார விதிமுறைகளுக்கு மாறாக இடம்பெறுவதால் ஆலயங்கள் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஆலய நிர்வாகத்தினரும் பக்தர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயம் இரு வாரங்கள் முடக்கப்பட்டு ஆலய நிர்வாகத்தினரில் 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் நாம் அறிந்ததே. மேலும், பருத்தித்துறை சிவன் ஆலய அம்பாள் ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளை மீறி சுவாமி வெளி உலா வந்தது. இதனால் திருவிழா தடைப்பட்டது. பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மூலம் மீண்டும் நிபந்தனைகளுக்கு கட்டுபட்டு அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது.

அத்தோடு, மட்டக்களப்பு ஐயங்கேணி வைரவர் ஆலயத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி தீமிதிப்பு இடம்பெற்றதால் ஆலய அறங்காவலர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அத்துடன், களுவங்கேணி மாரியம்மன் ஆலய உற்சவத்தில் பங்கேற்ற 114 பேருக்கு கொரோனா தொற்றிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே, இவற்றை கருத்திற்கொண்டு ஆலய நிர்வாகத்தினரும் பக்தர்களும் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றி ஆலயங்களை முடக்காமல் பார்த்துக்கொள்வது எமது பொறுப்பாகும். மேலும், சில ஆலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாற்குட பவணி மக்கள் நலன்கருதி தற்காலிகமாக பிற்போடப்பட்டமையும் பாராட்டத்தக்கது

Wed, 08/11/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை