நெருக்கடிகளை தவிர்த்துக்கொள்ள தத்தமது நிர்வாகப் பிரதேசத்திலேயே தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள்

இராணுவத் தளபதி மக்களுக்கு அறிவுறுத்தல் 

கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்பவர்கள் தமது கிராம சேவை அதிகாரி பிரிவு அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக நிர்வாக பிரதேசத்தில் மட்டும் தமக்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். 

அந்தந்த பிரதேசங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கான தடுப்பூசியை அந்தந்த பிரதேசத்திலேயே பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
தடுப்பூசி வழங்கும் சில நிலையங்களில் கடந்த சில தினங்களாக இடம்பெற்றுள்ள நெருக்கடி நிலைமையை கவனத்திற் கொண்டே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கொழும்பு மாவட்டத்தில் 30வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொழும்பு விஹாரமாதேவி பூங்கா மற்றும் தியத்த உயனவிலும் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி நிலையங்களில் தமக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

நாட்டில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் நேற்றுமுன்தினம் மாத்திரம் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 241 நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கிணங்க நாட்டில் நேற்று வரை ஒரு கோடி இருபத்திமூன்று இலட்சத்து 25 ஆயிரத்து 787 பேருக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில் 71இலட்சத்து 73 ஆயிரத்து 120 பேருக்கு நேற்றுவரை இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை 2 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளோரின் எண்ணிக்கை 71இலட்சத்து 73 ஆயிரத்து 120 பேர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

 

  

Tue, 08/31/2021 - 09:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை