வழிமுறை மாறினாலும் நோக்கம் மாறவில்லை; பூநகரியில் அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்

மக்களின் ஔிமயமான எதிர்காலத்திற்காவே அரசியல் அதிகாரங்களை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர், வழிமுறைகள் மாற்றமடைந்திருந்தாலும் தன்னுடைய நோக்கத்தினை மாற்றிக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வளங்களை சுரண்டுகின்ற அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்கு நேற்று(09.08.2021) விஜயம் மேற்கொண்டு, பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். பூநகரிப் பிரதேசத்தினைச் சேர்ந்த சுமார் 16 கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட குறித்த கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக, இந்தியக் கடறறொழிலாளர்களின் அத்துமீறிய சட்ட விரோதச் செயற்பாடுகள், உள்ளூர் இழுவை வலைப் படகுகளினால் ஏற்படும் பாதிப்புக்கள், தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்தல் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சருக்கு எடுத்துக் கூறப்பட்டது.

மேலும், எரிபொருள் நிரப்பும் நிலையம், வலை மற்றும் மீன் தீவன உற்பத்திகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடு, நாகதேவன் துறை மற்றும் நல்லூர் போன்ற இடங்களில் இறங்கு துறைகளை உருவாககுதல், கடலட்டை போன்ற பண்ணை முறையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடு உட்பட பல்வேறு எதிர்பார்ப்புக்கள் தொடர்பான கோரிக்கைகளும் பூநகரி கடற்றொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களுக்கு ஔிமயமான எதிர்காலத்தினை உருவாக்க வேண்டும் என்ற நோக்குடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் யாதார்த்தினை புரிந்து கொண்டு மாற்றுத் திட்டத்தினை தெரிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், தேசிய நீரோட்டத்தில் இணைந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தினை வளர்ப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கான ஔிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதே இலக்காக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது கிடைத்திருக்கின்ற அமைச்சு அதிகாரத்தின் ஊடாக சாத்தியமான பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இச்சந்தர்ப்பத்தினை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேணடும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் சாத்தியமான வழிவகைகளின் ஊடாக நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 08/10/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை