ஜெனிவாவில் சாதக தீர்வு எட்டப்படும்

உலக நாடுகளுக்கு விளக்கமளிக்கப்படுவதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று தெரிவிப்பு

உலக நாடுகளில் பல பிரச்சினைகள்  உள்ளபோதும் இலங்கை பிரச்சினையை மட்டுமே ஒவ்வொரு வருடமும் முன்னெடுப்பது குறித்தும் விசனம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் ஒவ்வொரு வருடமும் இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. எனவே எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை மற்றும் ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரத்தில் சாதகமான தீர்வு எட்டப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த சில வாரங்களாக சர்வதேச ரீதியில் இலங்கைக்கு மிக முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுவருகின்றன. எமது நிலைப்பாடு பற்றி நாம் தெளிவுபடுத்தியிருக்கின்றோம். அந்த நாடுகளிலுள்ள இலங்கையின் தூதுவர்களான மொஹான் பீரிஸ் மற்றும் சி.ஏ சந்திரபிரேம ஆகியோர் மூலமாக இந்தத் தெளிவுபடுத்தலை செய்துள்ளோம். இதற்கு மேலதிகமாக கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதவர்களை தனித்தனியாக சந்தித்து ஜெனீவா கூட்டத்தொடருக்குத் தொடர்புடைய  விடயங்களையும், தெளிவுபடுத்தலையும் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் நான் செய்துள்ளேன்.

செப்டம்பர் 12ஆம் திகதி ஐ.நா மனித உரிமைப் பேரவை ஜெனீவா நகரில் கூடுகின்றது. செப்டம்பர் 21ஆம் திகதி ஐ.நா பொதுச் சபைக் கூட்டம் நியூயோர்க் நகரில் கூடுகின்றது. இவ்விரண்டு மாநாடுகளிலும் நாம் எமது நாட்டிற்கான அனைத்து பயனையும் பெற எதிர்பார்க்கின்றோம்.

இதுகுறித்து நாம் நிச்சயம் கேட்கவேண்டிய கேள்விகள் சில உள்ளன. இன்று உலகில், குறிப்பாக தெற்காசிய வலயத்தில் பல்வேறு நெருக்கடிகள் உள்ளன. இந்த நிலைமை ஊடாக உலக மக்களுக்கு மேலதிகமான பாரதூரப் பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன. மனிதப்படுகொலை, குண்டு வெடிப்புகள், நிலையற்ற தன்மை, துப்பாக்கி, ஆயுதப் பிரச்சினைகள், அகதிகள், தீவிரவாதம் என பிரச்சினைகளும் இந்த வலயத்தில் அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்களினால் ஏற்படுகின்றன.

இலங்கை என்பது அனைத்து நாடுகளுடனும் சிறந்த தொடர்பை வைத்துக்கொண்டு அமைதியாகஇருக்கின்ற நாடாகும். எமது நாட்டினால் ஏனைய நாடுகளுக்கோ, எவருக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. எனினும் ஒவ்வொரு வருடமும் ஜெனீவாவில் இலங்கை பற்றி விமர்சித்து, பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமையிட்டு அதிர்ச்சியடைகின்றோம். இதற்கு உண்மையான காரணம் என்ன என்கின்ற பிரச்சினை எழுகின்றது. இதில் நீதி உள்ளதா? எடுகோள்கள் என்ன? பேச்சு நடத்தபல பிரச்சினைகள் உள்ள நிலையிலும் இலங்கையை தெரிவுசெய்து ஏன் இவ்வாறு பேச்சு நடத்துகின்றார்கள் என்கின்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும் .

உண்மையில் இது மனித உரிமைகளுடன் சம்பந்தப்பட்டதா? அல்லதுஅதற்கு அப்பாலான அரசியல் நிகழ்ச்சி நிரலா? ஐ.நா ஜெனீவா பேரவை கடந்த மார்ச் மாதத்தில் கூடியது.

இந்த 06 மாத இடைவெளியில் கொரோனா தொற்றின் கடுமையான நெருக்கடியை இலங்கை சந்தித்தது. அந்த காலகட்டத்திலும் அனைத்து துறைகளிலும் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த அரசாங்கத்தினால் முடிந்த நிலையில் மிகவும் திறந்த மனதில் அதன் தெளிவுகளையும் முன்வைப்பதே எமது அபிப்பிராயமாகவும் உள்ளது. எனவே எமது மக்கள் இந்த நிலைமையில் பாதுகாத்து முன்நோக்கிப் பயணிக்கச் செய்வதற்கு நாம் எடுக்கின்ற இந்த முயற்சிகளுக்கு உதவியளிக்கும்படி அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

மகா சங்கத்தினர் உட்பட சர்வ மத்தலைவர்களினதும் ஆலோசனைகளை நாங்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முக்கியத்துவமாகவே அவதானித்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 08/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை