'நாளை முதல் புதிய நடைமுறை அமுல்; தரம் பிரிக்கப்படாத குப்பைகளுக்கு தடை'

கல்முனை மாநகர சபை எல்லையினுள் நாளை 14ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மாத்திரம் சேகரிக்கும் நடைமுறை அமுல்படுத்தப்படவிருப்பதாக தெரிவித்துள்ள மாநகர சபை, தரம் பிரிக்கப்படாத குப்பைகள் எக்காரணம் கொண்டும் பொறுப்பேற்கப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளது.

இது விடயமாக மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கல்முனை மாநகர சபை எல்லையினுள் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகளை கொட்டுவதற்கென இடமொன்று (Dumping Place) எமது மாநகர சபை உட்பட அம்பாறை மாவட்டத்தின் வேறு எப்பகுதியிலும் இல்லாத சூழ்நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பள்ளக்காடு எனும் பகுதியில் மாத்திரமே கடந்த பல வருடங்களாக கொட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் பணிப்புரைக்கமைவாக தற்போது தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மாத்திரமே பள்ளக்காட்டில் கொட்டுவதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன், தரம்பிரிக்கப்படாத குப்பைகளை அங்கு கொட்டுவதற்கு தடை விதித்திருக்கிறது.

இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக கல்முனை மாநகர பிரதேசங்களில் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகளை கொட்டுவதில் எமது மாநகர சபை பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றது. இதனால் திண்மக்கழிவகற்றல் சேவையை வழமைபோல் முன்னெடுப்பதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

ஆகையினால், பொது மக்கள் தமது வீடுகளில் சேர்கின்ற சமையலறைக் கழிவுகள், உணவுக் கழிவுகள், மரக்கறி, இலை, குலைகள் போன்ற உக்கக்கூடிய கழிவுகளை வேறாகவும் பிளாஸ்டிக், பொலித்தீன், டின்கள் மற்றும் உக்க முடியாத பொருட்களை வேறாகவும் ஒப்படைக்க வேண்டும் எனவும் இவ்வாறு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் எக்காரணம் கொண்டும் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் வாகனங்களில் பொறுப்பேற்கப்பட மாட்டாது என்பதையும் வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

(கல்முனை விசேட நிருபர்)

 
Fri, 08/13/2021 - 18:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை