அடுத்த மூன்று வாரங்களில் நிலைமை மேலும் மோசம்

சுகாதார பிரிவும் மருத்துவமனைகளும் எதிர்நீச்சல்

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிக சந்தர்ப்பம்

இலங்கையில் கொரோனா திரிபு வைரஸான டெல்டா சுகாதார அமைப்பையும், மருத்துவமனைகளையும் சோர்வடையச் செய்துள்ளதாகவும், இவ் வைரஸ் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.எதிர்வரும் மூன்று வாரங்களில் நிலைமை மோசமடைய கூடும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். வரவிருக்கும் வாரங்களில் இன்னும் அதிகமான கோவிட் இறப்புகள் நிகழும்.ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது மருத்துவமனைகளுக்கு செல்ல பயப்படுவதன் காரணமாக, அவர்கள் மத்தியில் இறப்புக்கள் அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு வார காலத்தில் ஒட்சிசன் பற்றாக்குறையால் இறப்புகளைக் காணத் தொடங்கலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் கட்டில்கள் நிரம்பியுள்ளன. வரும் வாரங்களில் கொரோனாவிலிருந்து நாளாந்த இறப்புகள் குறைந்தது 200 ஐ எட்டும் என்றும் நாளாந்த நோயாளிகளின் எண்ணிக்கை ஐயாயிரம் வரை உயரும் என்றும் மருத்துவர்கள் கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இரண்டு முதல் மூன்று நோயாளிகள் அதிதீவிர மருத்துவ அறைகளில் கட்டில்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் உடனடியாக அமுல்படுத்தப்படாவிட்டால், டெல்டா மாறுபாட்டிற்கு எதிரான போர் மூன்று முதல் நான்கு வாரங்களில் உச்சத்தை அடையும்.

மேலும் அழிவுகளை ஏற்படுத்தும் என்று ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவப் பேராசிரியர், சுெனத் அங்கம்பொடி தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வாநாயகம்

 

Tue, 08/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை