சிறுவர்கள் தொடர்பான முறையற்ற காணொளிகள்

10 பேர் தொடர்பில் தகவல்; விரைவில் கைது

சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் சிறுவர்கள் தொடர்பான முறையற்ற காணொளிகள் அல்லது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. சிறுவர்களை முறையற்ற வகையில் காண்பிக்கும் வகையிலான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சேகரித்த அல்லது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய 10 பேர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த 10 பேரையும் அடுத்த வாரத்துக்குள் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட படல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவில் உள்ள விசேட பிரிவு மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் ஊடாக நாட்டில் எந்தவொரு பகுதியிலிருந்தும் மேற்குறிப்பிட்டவாறான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் எந்தமுறைமையைப் பயன்படுத்தியேனும் சமூக வலைத்தளங்களில் சேகரிக்கப்படுமாயின் அந்த சந்தர்ப்பத்திலேயே அது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும். எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.

கடந்த வெள்ளிக்கிழமை படல்கும்புர பிரதேசத்தில் இது தொடர்பில் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரால் சுமார் 500 காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் போலியான சமூக வலைத்தள கணக்குகள் ஊடாக அவற்றை சேகரித்துள்ளார்.

அவர் சனிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரைப் போன்ற மேலும் 10 பேர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த 10 பேரையும் அடுத்த வாரத்துக்குள் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுதல் குற்றவியல் சட்டத்தின் தண்டனை சட்டக்கோவையின் கீழ் குற்றமாகும்.

இவ்வாறு பதிவேற்றப்படும் காணொளிகளில் அல்லது புகைப்படங்களில் இருப்பவர்கள் இலங்கை சிறுவர்களாயின் அவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் 24 மணித்தியாலங்களும் பொலிஸார் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

அதற்கமைய சமூக வலைத்தளங்களில் இவ்வாறானவற்றை பதிவேற்றும் நபர்கள் தொடர்பில் சந்தேகமின்றி இனங்காணக் கூடியதாகவுள்ளது. எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களிடம் அவற்றை கைவிடுமாறு வலியுறுத்துகின்றோம்.

அவ்வாறில்லையென்றால் குறித்த நபர்கள் இவற்றுடன் தொடர்புடைய வழக்குகளில் சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்படுவர் என்றார்.

 

Mon, 08/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை