அரச, தனியார்துறை சம்பளம்; அரசு ஒருபோதும் குறைக்காது

பொய்ப்பிரசாரங்கள்; செய்திகளில் உண்மையில்லை என அரசாங்கம் மறுப்பு

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையுமில்லையென ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான நேற்றைய (24) சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

அரச மற்றும் தனியார் துறைகளின் சம்பளத்தை குறைப்பதற்கோ அல்லது அதற்கான நிதியம் ஒன்றை உருவாக்குவதற்கோ எந்த ஏற்பாடுமில்லை. இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் எதுவித உண்மையுமில்லையென்றும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும மேலும் கூறினார். அரச அல்லது தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த சந்தர்ப்பத்திலும் அரசோ அரசியல்வாதிகளோ முன்மொழியவில்லை . கொவிட் 19 நிதி தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு அமைச்சரும் தமது சம்பளத்தில் இருந்து 10,000 ரூபாவை வழங்கி வருகிறார்கள். மாகாண மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் கூட இதற்கு பங்களித்து வருகிறார்கள். அரசாங்கம் எந்தவிதமான அழுத்தத்தின் கீழ் எந்த நிதியையும் பெற முயற்சிக்காதென்றும் சம்பள குறைப்பு தொடர்பான அனைத்து ஊடக அறிக்கைகளையும் பொறுப்புடன் நிராகரிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

கொவிட் நிதியத்திற்கு அமைச்சர்கள் தமது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளனர்.

அது போன்று அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் பெற வேண்டுமென சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் பிழையான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கதென்றும் அவர் தெரிவித்தார்.

 ஷம்ஸ் பாஹிம்

Wed, 08/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை