வெலிசறை முகாமில் வெடிபொருட்கள் திருட்டு

சிப்பாய்கள் உட்பட 4 பேர் கைது

வெலிசறை விமானப்படையின் வெடிமருந்து களஞ்சியசாலையில் ‘அமோனியா நைற்றைட்’ எனப்படும் வெடிமருந்தை திருடிய குற்றச்சாட்டில் விமானப்படை மற்றும் கடற்படை சிப்பாய்கள் இருவர் உட்பட நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

விமானப்படையின் வெலிசறையில் அமைந்துள்ள வெடிமருந்து களஞ்சியசாலையில் ‘அமோனியா நைற்றைட்’ என்ற வெடிமருந்து குறைந்துள்ளதாகவும் அவை திருடப்பட்டிருக்கலாம் என்றும் விமானப்படை தலைமையகத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடு தொடர்பில் களனி குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த வெடிமருந்துகள் கற்குவாரிகளில் பயன்படுத்தப்படுபவையாகும். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் விமானப்படை சிப்பாய், கடற்படை சிப்பாய் மற்றும் மேலும்  இருவர் உள்ளடங்குகின்றனர். இவர்களால் திருடப்பட்ட 70 கிலோ 500 கிராம் வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளதோடு , முச்சக்கரவண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் களனி குற்ற விசாரணைப் பிரிவினால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Tue, 08/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை