ஈரானின் புதிய ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசி பதவியேற்பு

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய இப்ராஹிம் ரைசி ஈரான் ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

மிதவாதப் போக்குக் கொண்டவர் என்று மேற்குலக நாடுகளால் பார்க்கப்பட்ட ஹசன் ரூஹானிக்கு பதிலாகவே கடும்போக்குக் கொண்ட மதத் தலைவர் ஒருவரான ரைசி ஈரானின் புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் தடைகளால் ஈரான் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் சவாலான சூழலிலேயே அவர் பதவிக்கு வந்துள்ளார். எனினும் இந்த ஒடுக்கப்படும் தடைகளில் இருந்து நாட்டை விடுவிப்பதாக ரைசி வாக்குறுதி அளித்துள்ளார்.

குறிப்பாக கடந்த வாரம் ஓமானுக்கு அருகில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது ஆளில்லா விமானத்தினால் நடத்தப்பட்ட தாக்குதருக்கு ஈரான் காரணம் என்று அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் குற்றம்சாட்டும் நிலையில் தற்போது பதற்ற சூழல் அதிகரித்துள்ளது. இந்தக் குற்றாச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.

60 வயதான ரைசி ஈரான் உயர்மட்ட தலைவர் அயதொல்ல அலி கமெனேவுக்கு நெருக்கமானவராக உள்ளார்.

முன்னாள் நீதித்துறை தலைவரான அவரது மனித உரிமை செயற்பாடுகள் பற்றி கடும் விமர்சனங்கள் எழுந்தன. 1988 இல் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் கொல்லப்பட்டதற்கு ரைசி மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை மீறல் குற்றசாட்டில் ரைசி மீது 2019 ஆம் ஆண்டு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 08/06/2021 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை