ஆப்கானில் வெளியேற்றப் பணிகளை விரைவுபடுத்த அமெரிக்கா நடவடிக்கை

ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டினரை மீட்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கடந்த 15ஆம் திகதி தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த வார இறுதிவரை 28 ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் அமெரிக்க அரசு செய்து கொண்ட உடன்பாட்டின்படி, இந்த மாத இறுதிக்குள்ளாக அந்நாட்டில் இருந்து அனைத்து அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் படையினர் வெளியேற்றப்பட வேண்டும்.

அதற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், மீட்பு நடவடிக்கைக்கான அழுத்தத்தில் அமெரிக்கா இருப்பதாக கருதப்படுகிறது.

இது தொடர்பாக வொஷிங்டனில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இறுதிக்கெடுவுக்குள் வெளிநாட்டினரை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்க முடியாவிட்டால், அதை நீட்டிக்கக் கோரலாமா என்பது பற்றி மற்ற நாடுகளுடனும் தாம் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.

அத்தகைய நிலைமை வரக்கூடாது என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். ஆப்கானிஸ்தானில் இன்னும் ஆயிரக்கணக்கில் மக்கள் நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கிறார்கள்.

அவர்களை எல்லாம் வெளியேற்றும்போது, நெஞ்சை பிளக்கும் காட்சிகள் மற்றும் வலிகள் இல்லாமல் இந்த முயற்சி வெற்றி பெறாது என தோன்றுகிறது என்று தாம் கவலைப்படுவதாக ஜோ பைடன் குறிப்பிட்டார். முன்னதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களை வெளியேற்ற 18 வர்த்தக விமானங்களின் சேவை பயன்படுத்தப்படவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்தது.

காபூல் நகர விமான நிலைய வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறும் நோக்கத்துடன் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவங்களில் இதுவரை 20 பேர் இறந்திருப்பதாக நேட்டோ அதிகாரியொருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி முகாமையிடம் தெரிவித்தார். இதேவேளை, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலைய வளாகத்தில் நேட்டோ படையினர், ஆப்கான் படைகள் மற்றும் ஆயுததாரிகள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு ஆப்கான் வீரர் இறந்துள்ளதாக ஜெர்மன் இராணுவம் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தின் வடக்குப் பகுதியில் நடந்த சண்டையில் ஒரு வீரர் பலியானார், மூன்று பேர் காயம் அடைந்தனர் என்று ஜெர்மன் இராணும் அதன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. காபூல் விமான நிலையத்துக்கு வெளியே தலிபான்கள் தங்களுடைய போராளிகளை நிறுத்தியிருக்கிறார்கள். இதேவேளை காபூல் விமான நிலைய வளாகம் மற்றும் அதற்கு உள்ளே அமெரிக்கா தலைமையிலான படையினருக்கு உதவியாக ஆப்கான் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் விமான நிலைய வாயில் மூடப்பட்டுள்ளதாகவும் நேட்டோ அதிகாரிகள் கூறியுள்ளதாக சி.என்.என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

 

Tue, 08/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை