ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்த தலிபான்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

காபூல் விமானநிலையத்தில் பதற்றம் நீடிப்பு

அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்தேய நாடுகள் ஆப்கானில் இருந்து தமது பிரஜைகள் மற்றும் சில ஆப்கானியர்களை வெளியேற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் நிலையில் அங்கு தலிபான்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது.

கிழக்கு நகரான ஜலாலாபாத்தில் கடந்த புதன்கிழமை தலிபான் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது.

வார இறுதியில் தலைநகர் காபூலை கைப்பற்றி நாட்டின் கட்டுப்பாட்டை தன்வசம் கொண்டுவந்த தலிபான்களுக்கு எதிராக நாட்டில் வெளியான முதல் எதிர்ப்பு அலையாக இது பார்க்கப்படுகிறது.

ஜலாலாபாத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சதுக்கம் ஒன்றில் தேசிய கொடியை ஏற்ற முயன்றபோது தலிபான் போராளிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சம்பவத்தை பார்த்த இருவர் மற்றும் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர். இதில் மூவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

ஜலாலாபாத்தில் தலிபான்களின் வெள்ளை நிற கொடிகள் இறக்கப்பட்டு கூரைகள் மேல் ஆப்கான் கொடிகள் ஏற்றப்பட்டிருக்கும் காட்சிகளை பிரிட்டன் நாட்டின் ‘ஸ்கை நியுஸ்’ தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

‘நான் இங்கு உங்கள் முன் நிற்கிறேன். 30 துப்பாக்கி குண்டுகளால் என்னை உங்களால் துழைக்க முடியும். என்னை கொல்லுங்கள், இந்தப் கொடிக்காக நான் எனது உயிரை தியாகம் செய்கிறேன். இது எனது கொடி. இறைவன் நாடினால் எனது அரசு மீண்டும் திரும்ப வரும்’ என்று ஆப்கான் தேசிய கொடியை போர்த்தி இருந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் ஸ்கை செய்தியாளரிடம் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தலிபான்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. தலிபான் எதிர்ப்பு மையப்பகுதியாக தஜிக் இன மக்கள் வலுவாக உள்ள பன்ஜ்சிர் பள்ளத்தாக்கு உள்ளது.

தலிபான்களுக்கு எதிராக போராடுவதற்கு ஆயுத உதவி தரும்படி பன்ஜ்சிர் தலைவர் அஹமது மசூத் மேற்குலக நாடுகளிடம் கேட்டுள்ளார்.

‘பன்ஜ்சிர் பள்ளத்தாக்கில் இருந்து நான் எழுதுகிறேன். முஜாஹித் போராளிகளுடன் இணைந்து எனது தந்தையின் வழியை பின்பற்றி தலிபான்களிடம் இருந்து நாட்டை மீட்பதற்கு தயாராகியுள்ளோம்’ என்று வொசிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு எழுதியுள்ளார். இவர் தலிபான் எதிர்ப்புப் போராளியான அஹமது ஷாஹ் மசூதின் மகனாவர். ஷாஹ் மசூத் 2001 ஆண்டு தலிபான்கள் சார்பில் அல் கொய்தா அமைப்பால் கொல்லப்பட்டார்.

மேற்கு நாடுகளின் பிரஜைகள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களுக்காக பணியாற்றிய ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை நேற்று தீவிரமாக இடம்பெற்றது. அமெரிக்கர்கள் ஆப்கானில் இருந்து முழுமையாக வெளியேற்றப்படும் வரை அமெரிக்கத் துருப்புகள் அங்கு தொடர்ந்து நிலைகொள்ளும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துருப்புகள் ஆப்கானில் இருந்து வெளியேறுவதற்காகன காலக்கெடு வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதியுடன் முடிவடையவிருக்கும் நிலையில் அந்த காலம் கடந்து அமெரிக்கப் படை அங்கு நிலைகொள்ள வாய்ப்பு இருப்பதாக பைடன் கூறியுள்ளார்.

சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானில் இன்னும் தங்கியிருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இவர்கள் தவிர அமெரிக்காவுக்காகப் பணியாற்றிய சுமார் 50 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரையிலான ஆப்கானியர்களையும் மீட்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக பைடன் தெரிவித்தார்.

தலிபான்கள் இந்த வேகத்தில் முன்னேறுவார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை என்றும் ஏ.பி.சிக்கு அளித்த பேட்டியில் ஜோ பைடன் கூறினார்.

நேற்றுக் காலை காபூல் விமானநிலையத்தில் அமைதி காணப்பட்டதாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் மொத்தம் 8,000 பேர் வரை வெளியேற்றப்பட்டிருப்பதாக காபூலில் உள்ள மேற்கத்தேய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விமானநிலைய வளாகத்திற்குள் மக்கள் நுழைவதை தலிபான்கள் கடந்த புதனன்று தடுத்து நிறுத்தினர்.

‘பெரும் குழப்ப சூழல் ஏற்பட்டது. தலிபான்கள் வானை நோக்கி சுட்டதோடு, துப்பாக்கிகளால் மக்களை தாக்கினர்’ என்று விமானநிலையத்திற்குள் நுழைய முயன்ற ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

விமானப் பயணத்துக்கான உரிய ஆவணங்களை வைத்திருப்போரைக்கூட, ஆயுதந்தாங்கிய தலிபான் படையினர் விமான நிலைய வளாகத்துக்குள் செல்லவிடாமல் தடுப்பதாக அதைப் பார்த்தவர்கள் கூறினர்.

விமானநிலையத்திற்கு வெளியே கூடிய மக்களை கலைப்பதற்கே வானை நோக்கி சூடு நடத்தியதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் யாரையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் காபூலில் உள்ள ஹமிட் கர்ஸாய் விமான நிலையத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், அமெரிக்கப் படை வீரர்கள் சுமார் 4,500 பேர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 08/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை