புதுக்குடியிருப்பில் நாளை தொடக்கம் வர்த்தக நிலையங்கள் பூட்டு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக நிலையங்களை நாளை சனிக்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை பூட்டி கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுக்குடியிருப்புப் பிரதேச வர்த்தக சங்கத்தினர் நேற்று வர்த்தக சங்கத்தினை கூட்டி தீர்மானம் எடுத்துள்ளார்கள்.

நாளை சனிக்கிழமை தொடக்கம் (21.08.21) எதிர்வரும் வெள்ளிக்கழமை 27.08.21 அதிகாலை வரை புதுக்குடியிருப்பில் உள்ள வணிக நிலையங்களை பூட்டி சுய கட்டுப்பாட்டினை மேற்கொள்வதற்கான தீர்மானத்தினை வணிகர் சங்கம் எடுத்துள்ளது.

பிரதேசத்தில் உள்ள மக்களை கொரோனாவின் பிடியில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் முச்சக்கரவண்டி சங்க நிர்வாகம், சிகை அலங்கரிப்பு சங்க நிர்வாகம் என்பன வர்த்தக சங்கத்தின் ஒன்று கூடலில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத் தலைவர் நீதன் அறிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்புப் பிரதேசத்திற்கு உட்பட்ட மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது

இவ் அறிவித்தலை மதிக்காது தங்களது வர்த்தக நிலையங்களைத் திறந்தால் தங்களுக்கு எதிராக புதுக்குடியிருப்பு சுகாதாரப் பிரிவினரின் தனிமைப் படுத்தல் சட்டத்தின் கீழ் தாங்களும் தங்களது வர்த்தக நிலையங்களும் தனிமைப் படுத்தப்பட்டு அன்டிஜன் பரிசோதனையும் பீசிஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு தாங்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள் என்றும் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பு விசேட நிரூபர்

 
Fri, 08/20/2021 - 10:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை