எதிரிகளை பிடிக்க தலிபான் வீடு வீடாக தேடுதல் வேட்டை

ஆப்கானின் முந்தைய அரசுக்கு அல்லது நேட்டோ படைக்காக வேலை செய்தவர்களை தேடும் நடவடிக்கையை தலிபான்கள் ஆரம்பித்திருப்பதாக ஐ.நா ஆவணம் ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமது எதிரிகளை தேடி தலிபான்கள் வீடு வீடாக சோதனை இடுவதோடு குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்துவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழிவாங்கும் செயல்கள் இல்லை என்று கூறியபோதும், ஆப்கானில் அதிகாரத்தை கைப்பற்றிய கடும்போக்கு இஸ்லாமியவாத குழுவான தலிபான்கள் தமது அதிகாரத்தை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கூறுவதற்கும் அவர்களின் செயல்களுக்கும் இடையிலான முரண்பாடு பற்றிய கவலை தற்போது அதிகரித்துள்ளது.

சர்வதேச ஆய்வுக்கான நோர்வே மையத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் இரகசிய ஆவணத்தில், தலிபான்கள் ‘கூட்டுச்சேர்ந்தவர்களை’ இலக்கு வைத்து செயற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

‘தலிபான்கள் மூலம் பெரும் எண்ணிக்கையான நபர்கள் இலக்கு வைக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது’ என்று இந்த அறிக்கையின் பின்னணியில் உள்ள குழுவின் தலைவர் கிறிஸ்டியன் நெல்லமன் தெரிவித்துள்ளார்.

‘இவ்வாறானவர்கள் தாமாக முன்வரும் வரை அவர்கள் சார்பில் அவர்களின் குடும் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்படுகின்றனர்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

தலிபான்களின் கறுப்புப் பட்டியலில் இருப்பவர்கள் பெரும் ஆபத்துக்கு முகம்கொடுப்பதாகவும் கூட்டுப் படுகொலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சக்திகள் தமது நாட்டு பிரஜைகளை ஆப்கானில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஐந்து நாட்களில் காபுல் விமானநிலையத்தில் இருந்து 18,000க்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டதாக நேட்டோ அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

இதில் வெளிநாட்டு படையினருக்கு உரைபெயர்ப்பாளர்களாக பணியாற்றிய சுமார் 6,000 ஆப்கான் நாட்டவர்கள் கடந்த வியாழக்கிழமை பின்னேரம் அல்லது நேற்றுக் காலை நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். வார இறுதியில் இந்த வெளியேற்றும் பணிகளை இரட்டிப்பாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

காபுல் விமானநிலையத்திற்கு வெளியில் நிலைமை தொடர்ந்தும் பதற்றமாக உள்ளது. நாட்டை விட்டு வெளியேற முயலும் ஆப்கானியர்களை தலிபான்கள் தடுத்து வருகின்றனர். விமானநிலைய மதிலுக்கு மேலால் தமது பிள்ளைகளை பெற்றோர் அமெரிக்க படையினரிடம் கொடுக்கும் வீடியோ ஒன்று அங்குள்ள நிலைமையை காட்டுவதாக உள்ளது.

மறுபுறம் ஆப்கானில் சிறிய அளவிலான தலிபான் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஆப்கானின் 102 ஆவது சுதந்திர தினம் கடந்த வியாழனன்று கொண்டாடப்பட்ட நிலையில் ஆப்கான் தேசிய கொடியை அசைத்தவாறு தலிபான் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்கானை கைப்பற்றிய தலிபான்கள் தமது வெள்ளை நிறக் கொடியை நாட்டின் தேசிய கொடியாக மாற்றியுள்ளனர்.

ஜலாலாபாத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது தலிபான் உறுப்பினர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூவர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அசாதாபாத் நகரில் கடந்த வியாழனன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

20 வருடங்களுக்கு முன் அமெரிக்க தலைமையிலான படையால் ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட தலிபான்கள் தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்துள்ளனர். இதற்கு முன் தலிபான்கள் அதிகாரத்தில் இருக்கும்போது பல்வேறு கொடுமைகளை நிகழ்த்தியுள்ளனர். பொதுவெளியில் மரணதண்டனை வழங்குவது, பெண்களை பணியிடங்களுக்கு செல்லவிடாமல் தடுத்தது போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் அதிகாரத்தை கைப்பற்றியபின் அளித்த முதல் செய்தியாளர் சந்திப்பில், “பெண்களின் உரிமைகள் ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு காக்கப்படும்,” என தலிபானின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இருப்பினும் தலிபான் அமைப்பு இதுவரை எந்தவிதமான நடைமுறைகள் பயன்படுத்தப்படும் என தெளிவாக கூறவில்லை.

மேலும் பெண்கள் புர்கா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தப் போவதில்லை என தலிபான்கள் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தலையை மறைக்கும் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த முறை தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பெண்கள் பணிபுரிய அனுமதிக்கப்படவில்லை. பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எட்டு வயதிலிருந்து பெண்கள் புர்கா அணிய வேண்டும் என்ற விதிகள் இருந்தன.

மேலும் ஏதேனும் ஆண் குடும்ப உறுப்பினரின் துணையுடனேயே பெண்கள் வெளியே வரவேண்டும். இதை மீறும் பெண்களுக்கு பொதுவெளியில் கசையடி வழங்கப்படும்.

மேலும் அவர்கள், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தங்களுக்கு எந்த எதிரிகளும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு படையினரின் முன்னாள் உறுப்பினர்களுக்கும், வெளிநாட்டு படைகளில் பணியாற்றியவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு வெளிநாட்டு அதிகாரிகளும், ஆப்கானியர்கள் பலரும் சந்தேகத்தில் உள்ளனர். நேர்காணல் ஒன்றில் தலிபான்கள் மாறிவிட்டனரா என்று கேள்வி எழுப்பியதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

Sat, 08/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை