மக்களது நம்பிக்கையை வெல்வதாக ஆணைக்குழுக்கள் அமைய வேண்டும்

ஜனாதிபதி ஆணைக்குழு முன் பேராசிரியர் சர்வேஸ்வரன் சாட்சியம்

நாட்டின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறை தீர்வொன்றே மிகப் பொருத்தமானது. அதனை முதலில் மறைந்த முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவே பகிரங்கமாக வலியுறுத்தினாரென கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

நாட்டில் அமைக்கப்படும் ஆணைக்குழுக்கள் மக்கள் நம்பிக்கையை வெல்வதாக அமையவேண்டும் அத்தகைய ஆணைக்குழுக்களில் பாதிக்கப்பட்டோரின் பங்கேற்பு அமைவது முக்கியமானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கடந்தகால ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்கள் தொடர்பில் பரிந்துரை மற்றும் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வில் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.எம்.எச்.டி. நவாஸ் தலைமையில் நடைபெற்ற மேற்படிஆணைக்குழு முன்னிலையில்

சுமார் ஒன்றரை மணி நேரம் மேற்படி சாட்சியப் பதிவு இடம்பெற்றதுடன் பேராசிரியர் சர்வேஸ்வரன் இங்கு மேலும் தெரிவிக்கையில்;

நாட்டில் மனிதாபிமான சட்டங்கள் மனித உரிமை சட்டங்கள் என்பன நடைமுறையிலுள்ளன.அதனை மீறிய செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவற்றில் குற்றவாளியாக காணப்படுபவர்ளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டாலும் அதில் மக்களுக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. அத்தகைய பொறிமுறைகள் நடைமுறைப்படுத்தப் படும்போது அது பாதிக்கப்பட்டவர்களின் பங்கேற்புடன் செயற்படுவதுடன் அவர்களது நம்பிக்கையை வெல்லும் வகையில் அது செயற்பட வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழு மூலம் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எனினும் எனது பரிந்துரைகள் அனைத்துமே தனியே தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது முழு நாட்டிற்கும் அனைத்து மக்களுக்கும் உரியவையாகும்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன அது சம்பந்தமாக கருத்து தெரிவித்த அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அது தொடர்பில் நம்பிக்கை ஏற்படுவது முக்கியமாகும். அதைவிடுத்து அரசாங்கம் தன்னிச்சையாக ஒரு குழுவை அமைத்து விட்டு பெயருக்காக அந்த குழு இயங்குவதில் அர்த்தமில்லை.

சமஷ்டி முறையே நான் பரிந்துரைக்கிறேன். அவ்வாறான சமஷ்டி முறைமை எமது நாட்டுக்கு பொருத்தமானதாக உருவாக்கப்படலாம்.

எனினும் உடனடியாக சமஷ்டிக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. முதலில் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்.

குறிப்பாக சமஷ்டி என்பது ஏதோ நாட்டை பிளவுபடுத்தும் ஒன்று என தென்னிலங்கை மக்கள் மத்தியில் ஒரு அபிப்பிராயம் காணப்படுகின்றது.

சமஷ்டி என்பது ஒரு நாட்டின் ஆட்சி முறையில் உள்ளடங்கக் கூடியதே பெரிய நாடுகளுக்கு மட்டுமன்றி சிறிய நாடுகளுக்கும் அது பொருத்தமானது.

அவ்வாறு பெல்ஜியம்,சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளை நாம் குறிப்பிட முடியும்.

சமஷ்டி முறைமையில் ஆட்சியில் மக்களின் பங்களிப்பு இடம் பெறுகிறது இலங்கையைப் பொறுத்தவரை, குறிப்பாக தமிழ் மக்கள் அத்தகைய உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

 

Fri, 08/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை