சிறுமியின் மரணத்திற்கு காரணமான சகலரும் தண்டிக்கப்பட வேண்டும்

இதில் உறுதியாக இருப்பதாக பாராளுமன்றில் ஜீவன் தெரிவிப்பு

டயமக சிறுமியின் மரணத்துக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருப்பதுடன், பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் மலையகத்தில்  சிறுவர்களை பாதுகாப்பதற்கான தகவல்களை திரட்டும் செலயணி ஒன்றையும் உருவாக்கி வருகிறோமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேசிய ஆகக்குறைந்த சம்பள சட்டத் திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் பல்வேறு அரசியல்வாதிகளும் கருத்துகளையும் தமது நிலைப்பாட்டையும் வெளியிட்டுள்ளனர். மலையகத்தில் இருந்து மாத்திரமே அவ்வாறு சிறுமிகள் பணிக்கு வருவதாகவும் கூறியுள்ளனர். ஒரு இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இவ்வாறு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மலையகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. வறுமை காரணமாகவே பணிக்குச் சென்றுள்ளனர்.

மலையக மக்கள் தரம்குறைவாக எந்தவொரு செயற்பாட்டையும் செய்யவில்லை. தமது சொந்தக்காலில் நின்று குழந்தைகளுக்கு கல்வியை பெற்றுக்கொடுக்கின்றனர். ஆனால், இந்தச் சிறுமியின் மரணத்தைவைத்து பல அரசியல்வாதிகள் தமது அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். மலையக மக்கள் பட்டியினில் வாழ்கின்றனர். வறுமையில் வாழ்கின்றனர் என்ற பரிதாபம் அவசியமல்ல. இரத்தம் சிந்தி இந்நாட்டுக்கதாக உழைத்தமைக்காக கொடுக்க வேண்டிய மரியாதையையும் கௌரவத்தையும் அங்கீகாரத்தையுமே கோருகிறோம்.

மலையகத்திலிருந்து கல்விக்கற்ற சமூகமொன்று உருவாகியுள்ளது. அவர்கள் உயர்ந்த துறைகளில் உள்ளனர். சர்வதேச ரீதியிலான போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களையும் நாட்டுக்காக கொண்டுவந்துள்ளனர். இதைப்பற்றி எவரும் பேசுவதில்லை. மலையக மக்கள் கஷ்டத்தில் இருப்பதற்கு தொழிற்சங்கங்களும் அரசியல்வாதிகளும்தான் காரணமென அறியாத சிலர் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். சட்ட நடவடிக்கைகள் எடுக்கவில்லையென எவரும் கூற முடியாது. நானே அதிகமாக இந்த விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்டுள்ளேன்.

கடந்த 8 வருடகாலமாக ரிசாத் பதியுதீன் வீட்டில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவற்றை தெரியாதென எவ்வாறு அவர் கூற முடியும். ரிசாத் பதியுதீன்தான் இதற்கு காரணமென நான் கூறவில்லை. ஆனால், அவரும் காரணம் என்பதை அவர் உணர்ந்துக்கொள்ள வேண்டும். ‘எனது மரணத்துக்கு காரணம்’ – சுவரில் எழுத்தப்பட்டுள்ளதாக செய்திகளை அறிந்தேன். இறந்த பெண் எவ்வாறு அப்படி எழுதியிருக்க முடியும். அப்படியென்றால் காரணத்தையும் எழுதியிருக்க வேண்டும். ஆகவே, இந்தச் சம்பவத்தின் பின்புலத்தில் குற்றவாளிகளாக எவர் இருந்தாலும் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளோம். அதேபோன்று எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க 18 வயதுவரை இலவசக் கல்வியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதுடன், தண்டனைகளும் கடுமையாக்கப்பட வேண்டும். வயது குறைந்தவர்களை பணிக்கு அனுப்பும் பெற்றோர் முதல் பணிக்கு அமர்த்துபவர்வரை அனைவரையும் தண்டிக்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.

பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு செயலணியொன்றை உருவாக்க நாம் தீர்மானித்துள்ளதுடன், தோட்டங்களில் இதன் ஊடாக தகவல்களை திரட்டி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும் ஏற்பாடுகளை செய்துவருகிறோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன

Thu, 08/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை