மாகாணங்களுக்கிடையில் கட்டுப்பாடு தொடரும் பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடர்ந்தும் வழமை போல்

தொழிலுக்கு செல்வோருக்கு முன்னுரிமை - திலும்

பொதுப் போக்குவரத்தை நிறுத்துவது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை. தொடர்ந்தும் பொதுப்போக்குவரத்தை முன்னெடுக்க இருப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் பற்றி கவனம் செலுத்தப்படுகின்றது. தொடர்ந்தும் தனியார், அரச சேவை ஊழியர்களின் பயணங்களுக்காக பொதுப் போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. போக்குவரத்துக்களில் ஈடுபடுவோர் உண்மையாக தொழிலுக்கு செல்கின்றார்களா என்பதை அறியவும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்.

திருமணம், மரணச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்ப்டடுள்ளது. அரச நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மிகவும் சிந்தித்து செயற்படும்படி கேட்டுக் கொள்கிறோம். திருமணம், ஆர்ப்பாட்டம், மரணச்சடங்கு, பொதுப்போக்குவரத்து என்பவற்றில் ஈடுபட்ட பலரும் கொரோனா கொத்தணிகளாக மாறிவிட்டனர் என்ற தகவலை சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் பொதுப் போக்குவரத்தை நிறுத்துவது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை. தொடர்ந்தும் பொதுப்போக்குவரத்தை நடத்துவோம்.

சிலர் சட்டங்களை மதிக்காமல் செயற்பட்ட நிலையில் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கின்றோம். எதிர்வரும் வாரங்கள் மிகவும் தீர்க்கமானது என்பதோடு தங்களைப் பாதுகாப்பு செல்கின்ற நிலையில் கடமைகளை சரிவர நிறைவேற்றும்படி கேட்டுக் கொள்கின்றேன். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, வைத்தியசாலைகளில் நோயாளர்கள் நிரம்பியுள்ளனர், கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகத் தெரிவித்தார். எனினும் அப்படியான நிலைமை இன்னும் ஏற்படவில்லை. நாட்டின் மருத்துவமனைகளில் சில நெருக்கடி உள்ள போதிலும் கட்டுப்பாட்டை மீறவில்லை. இதுவரை தீவிர சிகிச்சைப் பிரிவு வசதியின்றி எவரும் உயிரிழக்கவில்லை. கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், நோயாளர் அறைகளில் ஓரளவுக்கு நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது. வீடுகளில் தங்கி சிகிச்சைப் பெறுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்த முறையை அறிவித்துள்ளது. ஒட்சிசன் இன்றி நோயாளர்கள் உயிரிழக்கவும் இல்லை. அரசாங்கத்திற்கும் அதேபோல மக்களுக்கும் பொறுப்பிருக்கின்றது. மிகவும் பாதுகாப்பாக இருந்துகொள்ளுமாறு கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட் செயலணி பற்றிய விமர்சனங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

கொவிட் செயலணி இல்லாவிட்டால் கொரோனா தொற்று கட்டுப்படுத்த முடியாமற் போயிருக்கும். இந்த செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மிகவும் வெற்றிகரமாக கடந்த காலத்தில் தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார். சுகாதார விடயங்களில் அவர் தலையீடு செய்து முடிவெடுக்கமாட்டார். சுகாதார சேவைப்பணிப்பாளரும் செயலணியில் உள்ளார். அமைச்சர்களும் உள்ளனர். சுகாதார விடயம் பற்றி இராணுவத் தளபதி முடிவெடுக்கமாட்டார். ஆனால் தடுப்பூசி பணி உள்ளிட்ட பணிகளை வழிநடத்துவதே அவரது கடமை. இராணுவத் தளபதி மீது விமர்சனம் முன்வைப்பது கவலைக்குரியதாகும். இந்த செயலணியில் பலரும் பல பிரிவைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இராணுவத் தளபதி தலைமையிலான பிரிவினரிடையே மனிதவளம், ஏனைய வளங்கள் இருப்பதால்தான் அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். படையினர் தடுப்பூசி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் குற்றச்சாட்டு மிகவும் தவறானதாகும் என்றார்(பா).

ஷம்ஸ் பாஹிம்

Thu, 08/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை