பெருந்தோட்ட துறையில் விரைவில் புதிய தொழிற்சங்க கூட்டமைப்பு

உருவாகிறது என்கிறார் த.மு.கூ தலைவர் மனோ கணேசன்

தேயிலை, இறப்பர் பெருந்தோட்டத் துறையில் தொழிற்சங்க கூட்டமைப்பை நாம் உருவாக்கவுள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணி தொழிற்சங்கங்களும், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் இணைந்து இந்த கூட்டு செயற்பாட்டில் இறங்கும்.

இதன்பிறகு இதுவே பெருந்தோட்ட துறையில் மிகப்பெரும் தொழிற்சங்க அமைப்பாக இருக்கும். பெருந்தோட்ட நிறுவனங்களும், அரசாங்கமும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்க வாழ்வாதார விவகாரங்கள் தொடர்பில் முதலில் எங்களுடனேயே உரையாட வேண்டமென தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறினார்.

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்க தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊடக சந்திப்பில் மனோ கணேசன் எம்.பி மேலும் கூறியதாவது,

ஆசிரியர், அதிபர், விவசாயிகள், கமக்காரர்கள்,மீனவர்கள் தெருவுக்கு வந்து போராடுகிறார்கள். நாங்கள் இன்னமும் தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட தொழிலாளர்களை தெருவுக்கு இறக்கவில்லை. அப்படி இறங்கி போராடும் பாஷைதான் அரசாங்கத்துக்கு புரியமென்றால் அந்த பாஷையில் பேச நாம் தயார்.

நாட்டின் நிலைமையையும், தொழிலாளர்களின் நிலைமையையும் மனதில் கொண்டு நாம் அரசாங்கத்துக்கு அவகாசம் வழங்குகிறோம். விரைவில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள். இதை எங்கள் பலவீனமாக நினைக்க வேண்டாம். நியாயமான தீர்வு வராவிட்டால், தொழிலாளர்களை தெருவுக்கு இறக்கும் நிலைமை உருவாகும்.

நாட்டின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்து விட்டது. சம்பளம் ஆயிரம் என்று எழுத்தில் எழுதி கொடுத்து விட்டார்கள். ஆனால், எத்தனை நாள் வேலை என தீர்மானிக்கப்பட வில்லை.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1,000 ருபாய் கிடைப்பது இல்லயென தனக்கு இதுவரை புகார் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் நிமல் சிறிபால சில்வா கூறுகிறார். இது ஆச்சரியம்தான். இப்போது நாம் நாட்டுக்கே கேட்கும் வண்ணம் கூறுகிறோம். அமைச்சர் அவர்களே, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1,000 ருபாய் முறையாக கிடைப்பதில்லை. அது “நிறை” மற்றும் “எத்தனை நாள் வேலை” என்பவற்றால் தடையாகிறது.

 

Sat, 08/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை