மரண எண்ணிகையை பார்க்கும்போது மட்டக்களப்பில் டெல்டா வேரியன் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது

மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மயூரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டாவேரியன் இதுவரையில் உத்தியோகபூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை.இருந்தும் தொற்றுமுறையினையும், மரண எண்ணிகையினையும் பார்க்கும்போது, டெல்டாவேரியன் மட்டக்களப்பில் இருப்பதற்கான சாத்தியம் அதிகளவில் உள்ளது என மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 303கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மூன்று பேர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரனா நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (18) மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 106 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 38 பேரும்,வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேரும்,செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேரும்,வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேருமாக 303பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கோறளைப்பற்று மத்தி,செங்கலடி,பட்டிப்பளை ஆகிய பகுதிகளில் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 152 கொரனா மரணங்கள் ஏற்பட்டுள்ளன. மூன்றாவது அலையில் 143 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. 20 வயதுக்கும் 50க்கும் வயதுக்குட்பட்டவர்கள் 15பேரும்,50வயதுக்கு மேற்பட்டவர்கள் 137 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு மரணமடைந்தவர்களில் 54வீதமானவர்கள் ஆண்கள் ஆவர்.

கொரானா தொற்றுக்குள்ளானவர்களை வீட்டில்வைத்து பராமரிக்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிலர் வெளியில் வர்த்தக நிலையங்களுக்கு சென்றுவரும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் சமூகபொறுப்புடன் செயற்பட வேண்டும்.

தொற்றுக்குள்ளானவர்கள், தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டுள்ளவர்கள் வீட்டினைவிட்டு வெளியில் வரவேண்டாம்.அவ்வாறு யாரும் வெளியில்வந்தால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு சட்ட நடவடிக்கையெடுக்கப்படும்.

மாவட்டத்தில் தடுப்பூசிகளைப் பொறுத்தவரையில் 266,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்தில் 61800 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இது 30வயதுக்கு மேற்பட்ட 21வீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகின்றது.இன்னும் 50ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்குமானால் 30வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கல் பூர்த்தியடையும் எனவும் தெரிவித்தார்.

(வெல்லாவெளி தினகரன் , கல்லடி குறூப் நிருபர்கள்)

 
Thu, 08/19/2021 - 17:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை