கொரோனா பரவல்; ஆரம்பத்திலேயே இனங்கண்டு அரசாங்கம் நடவடிக்கை

உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு சுகாதார அமைச்சு பதில்!

இலங்கையில் வைரஸ் பரவல் ஆபத்தினை ஆரம்பத்திலேயே இனங்கண்டு உரிய முகாமைத்துவத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் அலுவலகமானது கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் இலங்கை தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.அதற்கு பதில் வழங்கும் வகையில் மேலும் தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம்:

இலங்கையானது தற்போதைய எச்சரிக்கை மிகுந்த சூழ்நிலையை ஆரம்பத்திலிருந்தே இனங்கண்டு வந்துள்ளது. இன்று நேற்று அல்ல நாம் ஏற்கனவே இதனை அறிந்திருந்தோம்.எவ்வாறெனினும் மக்களை பயத்திற்குள்ளாக்கி நாம் இந்த சூழ்நிலையில் இருந்து வெளிவர முடியாது.

இத்தகைய சூழ்நிலையில் மேற்படி தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் இலங்கையின் தடுப்பூசி செயற்திட்டங்கள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டில் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு பத்து வீதமானவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் இலக்கினை இலங்கை அரசாங்கம் சாத்தியமாக முன்னெடுத்துச் செல்வதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட் ரோஸ் கெப்ரியாயேஸ் தனது டுவிட்டர் செய்தியில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Tue, 08/03/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை