நியாயப்படுத்தும் செயலில் ஐ.நா ஆணையாளர் ஈடுபடக்கூடாது

ஈடுபடக்கூடாது என உறவுகள் தெரிவிப்பு 

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை நியாயப்படுத்தும் செயற்பாடுகளில் ஐ.நா ஆணையாளர் ஈடுபடக்கூடாதென வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் பன்னிரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லையென அந்த அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். இந்த அமைப்பினரால் நேற்று (26) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“வலிந்து காணாமல் ஆக்கட்டவர்களின் உறவினராகிய நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம். எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமான இலங்கை அரசிடமிருந்து எமக்கு ஒருபோதும் நீதி கிடைக்காதென்பதை நன்கு உணர்ந்துள்ளதுடன், நாம் ஐ.நா. மனித உரிமைப் பேரவை,மற்றும் ஐ.நா. பொறிமுறைகள் உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமிருந்தே நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

இதேவேளை, இலங்கை அரசு ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகங்களை வடக்கு, கிழக்கில் திறந்து எமது மக்களையும் உலக சமுதாயத்தையும் ஏமாற்றும் நடவடிக்கைகளில் சில வருடங்களாக ஈடுபட்டு வருகிறது.

இதை ஒருவித நம்பகமற்ற பொறிமுறையாகவும் இறப்பு அத்தாட்சிப் பத்திரங்களையோ அல்லது கண்துடைப்பு நிவாரணத்தையோ வழங்கி வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தாமல் ஏமாற்றும் முயற்சி என்பதை அறிந்து பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் திட்டவட்டமாக நிராகரித்திருந்தபோதும் இலங்கை அரசும் அதற்கு முண்டுகொடுக்கும் வெளிச்சக்திகளும் இந்த அலுவலகங்களைத் தொடர்ந்தும் இயங்கவைக்க முயன்று வருகின்றன.

அதுமட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐ.நா. பொறிமுறையும், குறிப்பாக இலங்கை தொடர்பான தீர்மானங்களை மனித உரிமைப் பேரவையூடாக அமெரிக்காவினதும் இந்தியாவினதும் பின்னணியுடன் இயற்றிவரும் நாடுகளான பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, வடக்கு மசிடோனியா, மாலாவி மற்றும் மொன்ரநீக்ரோ ஆகியவையும், ஏன் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கூட தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்தப் பொறிமுறையை இயக்குமாறு தொடர்ந்தும் இலங்கை அரசை வலியுறுத்தி வருவதும் அவ்வாறு இலங்கை ஓரளவுக்குச் செயற்படுவதாகக் காட்டும்போது வரவேற்றுவருவதும் கவலையளிப்பது மட்டுமல்ல கண்டனத்துக்குரிய ஒரு செயற்பாடாகவும் அமைந்திருக்கிறது.

அண்மையில் இரகசியமாக கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ள அலுவலகம் தொடர்பான நகர்வையும் நாம் இந்த வகையிலேயே நோக்கவேண்டியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Fri, 08/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை