சிறுமியின் மரண விசாரணைகளுக்கு சமூக ஊடக பதிவுகளால் இடையூறு

விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க அரசு ஏற்பாடு

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் பல சிக்கல்களை ஏற்படுத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார்.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் சிறுமியின் மரணம் தொடர்பான தகவல்கள் விசாரணைகளைத் தடுப்பதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்கள் தொடர்பான அறிக்கையை அடுத்த வாரமளவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அதனையடுத்து அவற்றில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் கெஹெலிய தெரிவித்தார்.

சம்பவமொன்று தொடர்பில் வழக்கு தொடரப்பட்ட பின்னர் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து கருத்துக்களை அல்லது நிலைப்பாடுகளை தெரிவிப்பத்திலிருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் சகலருக்கும் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

எனவேதான், இது தொடர்பில் நீதி அமைச்சு மற்றும் ஊடக அமைச்சுக்கிடையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் அல்லது இரு வாரங்களுக்குள் இது தொடர்பான அறிக்கையை நாம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

 

Wed, 08/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை