ஓமான் வளைகுடாவில் கப்பல் கடத்தல்: ஈரான் மீது சந்தேகம்

ஓமான் வளைகுடாவில் பனாமா கொடியுடனான கப்பல் ஒன்றை கடத்தி இருக்கும் ஆயுததாரிகள் அதனை ஈரானை நோக்கி செலுத்துமாறு உத்தரவிட்டிருப்பதாக கடல்சார் உளவு அமைப்பான லொயிட் லிட் உறுதி செய்துள்ளது.

பிற்றுமன் கனிமப்பொருளை ஏற்றிய எம்.வி அஸ்பேட் பிரின்சஸ் என்ற அந்தக் கப்பல் ஹார்முஸ் நீரிணையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக அது குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருப்பது யார் என்று உறுதி செய்யப்படாதபோதும் ஈரான் படையினர் இதனை செய்திருக்கலாம் என்று அவதானிகள் சந்தேகிக்கின்றனர்.

இதனை நிராகரித்திருக்கும் ஈரான், இது தமது நாட்டுக்கு எதிரான விரோத நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றினால் இயக்கப்படும் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது ஓமானுக்கு அப்பால் உள்ள கடல்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டமை குறிப்பித்தக்கது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் குறித்த தாக்குதலுக்கு ஈரான் மீது குற்றம்சாட்டியபோதும் ஈரான் அதனை கண்டிப்பாக மறுத்துள்ளது.

கடத்தப்பட்டிருக்கும் கப்பல் டுபாயைத் தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும் இந்த நிறுவனத்தின் கப்பல் ஒன்றை ஈரான் புரட்சிப்படை கடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகின் ஐந்தாவது மிகப்பெரிய எண்ணெய் விநியோகப் பாதையாக இருக்கும் ஹார்முஸ் நிரிணையின் நுழைவாயிலுக்கு அருகில் ஆயுதம் ஏந்திய ஒன்பது பேரால் இந்த கப்பல் கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள் ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் பெரும்பாலான எண்ணெய் கப்பல்களை இயக்குகின்றன. உலகின் 20 வீதமான எண்ணெய் விநியோகம் ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது. ஆனால் ஹார்முஸ் நீரிணையை காரணம் காட்டி ஈரான் உலக நாடுகளை மிரட்டியும் வருகிறது.

ஈரானுக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையேயான அணுசக்தி விவகாரத்தின் போது ஹார்முஸ் நீரிணை பேசுபொருளானது. ஈரான் எண்ணெய் கப்பல்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டால் ஹார்முஸ் நீரிணை மூடப்படும் எனவும் மிரட்டியது அந்நாடு.

ஆனால் ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோன்று ஹார்முஸ் நீரிணை பிரச்சினைக்கும் பதற்றத்துக்கும் உள்ளானால் மசகு எண்ணெய் விலை அதிகரித்து உலக நாடுகள் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

Thu, 08/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை