இடைத்தரகர்களுக்கு ஒருபோதும் இடமில்லை

அரசு ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்காது

மக்களுக்கு 100 ரூபாவுக்கும் குறைந்த விலையில் 01 Kg அரிசியை வழங்க விரைவில் நடவடிக்கை

அரிசியின் விலையை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட்டுவரும் இடைத்தரகர்களுக்கு உள்நாட்டு சந்தையில் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரிசியின் விலையை ஸ்திரத்தன்மையுடன் பேணிவருவது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இந்த ஊடகச்சந்திப்பிலேயே வர்த்தக அமைச்சர் இவ்வாறு கூறியதுடன், அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

எமது நாட்டின் பிரதான தேசிய உணவாக அரிசியே காணப்படுகிறது. அரிசியின் விலையை ஸ்திரத்தன்மையுடன் பேண அரசாங்கம் பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளது. 100 ரூபாவுக்கும் குறைவாக அரிசியின் விலையை பேணிச்செல்லும் நோக்கில் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அமைச்சரவையில் விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விடவும் பல மடங்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைய இதுவரைக்காலம் விதிக்கப்பட்டுவந்த தண்டப்பணத்தை ஒரு இலட்சத்திலிருந்து 10 இலட்சம்வரை உயர்த்தியுள்ளோம்.

அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளை தவிர எந்தவொரு இடைத்தரகரும் அரிசியை களஞ்சியப்படுத்திவைக்க முடியாதென்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலையால் உற்பத்தி மற்றும் பரிமாற்றல் செயற்பாடுகள் முழுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. என்றாலும் எமது நாட்டில் அரிசி மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஸ்திரத்தன்மையை பேண ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.

இடைத்தரகர்களால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அரிசி ஆலைகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய (நேற்று) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 40 இலட்சம் கிலோவுக்கும் அதிகமான தொகை அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 06 ஆலைகள் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சீல் வைக்கப்பட்டுள்ளன. அரிசியின் விலையை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட்டுவரும் இடைத்தரகர்களுக்கு உள்நாட்டு சந்தையில் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 08/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை