ஹொங்கொங் மாணவ அமைப்புகள் மீது பொலிஸ் கெடுபிடி அதிகரிப்பு

சீன அரசுக்கு எதிராக ஹொங்கொங்கில் நிகழ்ந்துவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு உந்து சக்தியாக விளங்கிவரும் ஹொங்கொங் பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஹொங்கொங் பொலிசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் ஹொங்கொங் பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி வளைத்த பொலிஸார் மாணவர் சங்க கட்டடத்துக்குள் புகுந்து தேடுதல் வேட்டை நடத்தி பல பொருட்களைக் கைப்பற்றி தம்முடன் எடுத்துச் சென்றனர்.

இந்த மாணவர் சங்கம் வன்முறையை நியாயப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால் தாம் தொடந்து இச்சங்கத்தின் நடவடிக்கைகளை இறுக்கமாகக் கண்காணித்து வருவதாக ஒரு உயர் ஹொங்கொங் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். ஹொங்கொங் பல்கலைக்கழகங்களை தமது கவனிப்பின் கீழ் கொண்டு வந்து மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஒரு முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும் என மாணவர் தரப்பு தெரிவித்துள்ளது.

இதே சமயம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் வழிநடத்தும் மாணவ தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவ தலைவர்கள் இடைநிறுத்தப் படுகின்றனர். இம் மாணவர்கள் சங்கங்களை சீனப் பத்திரிகையான ‘பீப்பிள்ஸ் டெய்லி’ ‘பயங்கரமான கட்டி’ என வர்ணித்துள்ளது.

மாணவ இயக்கங்கள் மீதான கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு வருவது மாணவர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஹொங்கொங் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் மாணவர் அமைப்புகளின் செயற்பாடுகள் தீவிரமாகக் காணப்பட்டன. இதை ஒடுக்கும் வகையிலேயே ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 2014 ஆர்ப்பாட்டத்தின் போது முன்னணி வகித்த நாதன்லோ என்ற மாணவர் பின்னர் நகரின் சட்ட சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு சத்தியபிரமாணம் செய்தபோது ‘சொந்த மக்களையே கொலை செய்யும் ஆட்சிக்கு ஒரு போதும் விசுவாசமாக இருக்க மாட்டேன்’ எனக் கூறியதை சுட்டிக் காட்டும் மாணவர்கள், தம்மை ஒடுக்கும் நடவடிக்கைகள் அச்சமூட்டுவதாக உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

Wed, 08/04/2021 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை