அடுத்த வருடத்திற்கான பட்ஜட்டிலேயே தீர்வு

 பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் தெரிவிப்பு

ஆசிரியர்களது கோரிக்கைகளுக்கு அரசு ஆதரவு; எனினும் உடனடியாக நிறைவேற்றுவதில் பாரிய சிரமம்

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்றுக்கொடுப்பது சாத்தியமில்லை என்பதை ஆசிரியர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடி முறையான தீர்வொன்றை எதிர்வரும் வரவு - செலவு திட்டத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு நிவாரணம் அல்லது சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் வகையில் ஆசிரியர்கள் முன்னெடுக்கும் போராட்டம் நியாயமானதல்ல. அடுத்தாண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் இவர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தியின்உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

கல்வி அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஆசிரியர்களுக்கு நிவாரணம் அல்லது சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம். என்றாலும் அது உடனடியாக செய்யக்கூடியதல்ல. ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு கடந்த 25 வருடங்களாக இருந்து வருகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்போது ஏனைய அரச துறைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தவேண்டி உள்ளது. இல்லாவிட்டால் பாரிய சிக்கல்கள் ஏற்படும். அதனால் அனைத்து அரச சேவையாளர்களதும் சம்பளம் தொடர்பில் வரவு - செலவு திட்டத்தில் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொவிட் தொற்று காரணமாக அரசாங்கத்தின் வருமான வழிமூலங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்றுக்கொடுப்பது சாத்தியமில்லை என்பதை ஆசிரியர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். அதனால்தான் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடி முறையான தீர்வொன்றை எதிர்வரும் வரவு - செலவு திட்டத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருக்கின்றோம்.

இதேவேளை பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகின்றோம். ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் முதலாம் கட்ட தடுப்பூசி இதுவரை 84 சதவீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்துவரும் 4 வாரங்களில் இரண்டாவது தடுப்பூசி அவர்களுக்கு வழங்கப்படும். அதன் பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். அதற்கான முன் ஆயத்தமாகவே ஆசிரியர், அதிபர்களுக்கு பாடசாலைகளுக்கு சமூகமளிக்குமாறு அறிவித்திருந்தோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 08/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை