ஆப்கான் வடக்கை முழுமையாக கைப்பற்ற தலிபான் முன்னேற்றம்

ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

ஆப்கானிஸ்தானில் வேகமாக முன்னேற்றம் கண்டு வரும் தலிபான்கள் நேற்று செவ்வாய்க்கிழமை நாட்டின் ஆறாவது மாகாணத் தலைநகரை கைப்பற்றி வடக்கில் தமது பிடியை மேலும் இறுக்கியுள்ளனர். இதனால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பு உள்ள காபுல் மற்றும் நாட்டின் மத்திய பகுதிகளை நோக்கி வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்கள் தற்போது வடக்கின் மிகப்பெரிய நகரான மசாரி சரீபை இலக்கு வைத்துள்ளனர். இந்த நகர் வீழ்ந்தால் வழக்கமாக தலிபான் எதிர்ப்பு அதிகம் கொண்ட வடக்கு பகுதி முழுமையாக அந்தக் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் நிலை உள்ளது.

அரச படையினர் நாட்டின் தென் பகுதியில் பஷ்தூன் மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற கந்தஹார் மற்றும் ஹெல்மன்ட் நகரங்களில் தலிபான்களுடன் கடுமையாக போரிட்டு வருகின்றனர்.

அமெரிக்க தனது நீண்ட கால போரை முடிவுக்குக் கொண்டுவந்து இந்த மாதம் முடிவில் ஆப்கானில் இருந்து தனது துருப்புகளை முழுமையாக வாபஸ் பெறவுள்ளது. இந்நிலையில் தலிபான்களை போர் நிறுத்தம் ஒன்றுக்கு இணங்கச் செய்வதற்காக அமெரிக்கா தனது சிறப்புத் தூதுவரை பேச்சுவார்த்தை நடத்த கட்டாருக்கு அனுப்பியுள்ளது.

சிறப்புத் தூதுவரான சல்மி கலில்சாத் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர தலிபான்களுக்கு அழுத்தம் கொடுப்பார் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. ‘வேகமாக மோசமடைந்து வரும் நிலையை சமாளிக்கும் சர்வதேச கூட்டு முயற்சி ஒன்றுக்கு அவர் உதவுவார்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கான் அதிகாரிகள் மற்றும் நெருக்கமான அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா மற்றும் ஈரானும் இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளன.

தலிபான்கள் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து தப்பி வந்த மக்கள் அங்கு தலிபான்கள் நிகழ்த்தும் கொடூரங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

‘தலிபான்கள் தாக்குதல் மற்றும் திருட்டில் ஈடுபடுகின்றனர்’ என்று தலைநகர் காபுலில் நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருக்கும் முகாமில் உள்ள ரஹிமா என்பவர் குறிப்பிட்டுள்ளார். அவர் செபர்கான் மாகாணத்தில் இருந்து தப்பி வந்துள்ளார். ‘குடும்பத்தில் இளம் பெண் அல்லது விதவை ஒருவர் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்கின்றனர். எமது கௌரவத்தை காப்பதற்கு நாம் தப்பிவந்தோம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தலிபான்களால் அய்பாக் நகர் கைப்பற்றப்பட்டதை அடுத்து நாட்டின் வடக்கில் அந்தக் குழு ஐந்து மாகாணத் தலைநகர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்தப் பிராந்தியத்தில் ஆப்கான் அரசு தமது பிடியை முழுமையாக இழந்து விடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் தென்மேற்கே நிம்ரோஸ் மாகாணத் தலைநகர் சரன்ஜ் நகர் நேற்று தலிபான்கள் வசமானது.

தாம் வடக்கில் மிகப்பெரிய நகரான மாசாரி சரீபை நோக்கி முன்னேவதாக தலிபான்கள் கடந்த திங்களன்று குறிப்பிட்டனர். ஏற்கனவே செபர்கான், குந்துஸ் மற்றும் தலோகானை வீழ்ந்த நிலையில் இது பிராந்தியத்தில் அரச படையின் பிடியை தளர்த்திவிடுவதாக உள்ளது. எனினும் அங்கு அரச படையின் கை ஓங்கி இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பவாத் அமான் தெரிவித்துள்ளார்.

Wed, 08/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை